8-9 நாட்கள் தூக்கமின்றி ஐபிஎல்லில் ஆடினேன்: ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்த 14வது ஐபிஎல் சீசனில், அஸ்வின் பாதியில் வெளியேறினார். அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து விலகினார். இது குறித்து அஸ்வின் கூறுகையில், சென்னையில் நான் வசிக்கும் பகுதியில், பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட என்னுடைய சகோதரர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் நான் ஐபிஎல் தொடரின் போது 8-9 நாட்களாக தூங்கவில்லை. தூக்கமின்றி போட்டிகளில் விளையாடியது எனக்கு மிகவும் மன அழுத்தத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் நான் ஐபிஎல்-ல் இருந்து விலகலாம் என முடிவெடுத்தேன்.

நான் ஐபிஎல்லை விட்டு பாதியில் வெளியேறினால், என் வாழ்க்கையில் இனி விளையாட வாய்ப்பு இருக்குமா என்ற கேள்வியும் என்னிடம் எழுந்தது. ஆனால் அந்த இக்கட்டான சூழலுக்கு ஏற்ப நான் செயல்படவேண்டியிருந்தது. ஆனால் எனது குடும்பத்தினர் குணமடைந்து, நான் போட்டிக்கு திரும்பலாம் என நினைத்த போது ஐபிஎல் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. அணிகளின் பபுள்கள் உடைந்தது என்றால் வெளியாட்கள் பபுளுக்குள் நுழைந்ததாக அர்த்தம் அல்ல. அது ஒரு வைரஸ், அது எங்கிருந்து, எப்படி பபுளுக்குள் நுழைகிறது என்பது யாருக்கும் தெரியாது. எனவே பபுள் உடைந்துவிட்டது என்றால் யாரேனும் உள்ளே நுழைந்து விட்டார்கள் என்று அர்த்தம் அல்ல, என தெரிவித்துள்ளார்.

Related Stories: