பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் நடால்-அலெக்சி பாப்பிரின் மோதல்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் ஆடவர் ஒற்றையரில் நடப்பு சாம்பியனான ரஃபேல் நடால், ஆஸ்திரேலிய வீரர் அலெக்சி பாப்பிரின்னை எதிர்த்து மோதுகிறார். முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோர், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிசில், பைனலுக்கு முன்னரே ஒருவரை ஒருவர் எதிர்த்து மோதவுள்ளனர். ரோலண்ட் கேராஸ் என அழைக்கப்படும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள், நாளை மறுநாள் (30ம் தேதி) துவங்குகின்றன. தற்போது இதில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மெயின் சுற்றுகளில் பங்கேற்க உள்ள வீரர்கள், யாரை எதிர்த்து போட்டியிடுவார்கள் என்பதை தீர்மானிக்கும் வகையில் குலுக்கல் முறையில் தேர்வு நடந்தது. இந்த குலுக்கலில் வீரர்கள் அனைவரும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர்.

இதில் ஒரு பாதி பிரிவில் முன்னணி வீரர்களான ஜோகோவிச், நடால் மற்றும் பெடரர் இடம் பெற்றுள்ளனர். இதனால் பைனலுக்கு முன்னரே இவர்கள் ஒருவருடன் ஒருவர் மோத வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், இவர்களில் ஒருவர்தான் பைனலுக்கு தகுதி பெற முடியும். செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச், தற்போது ஏடிபி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 18 ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். இருப்பினும் இதில் ஒரே ஒருமுறை கடந்த 2016ம் ஆண்டில் மட்டுமே ஜோகோவிச், பிரெஞ்ச் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். ஏடிபி தரவரிசையில் தற்போது 3ம் இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலின், பேவரிட் பிரெஞ்ச் ஓபன்தான். இதுவரை ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதில் பிரெஞ்ச் ஓபனில் மட்டும் 13 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிபி தரவரிசையில் தற்போது 8ம் இடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரும், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 20 ஆடவர் ஒற்றையர் பட்டங்களை கைப்பற்றியுள்ளார்.

இந்த முறை பிரெஞ்ச் ஓபனில் இருவரில் யார் வென்றாலும், ஆடவர் ஒற்றையரில் அதிக பட்டங்கள் என்ற புதிய சாதனையை எட்டுவார்கள். முன்னணி வீரர்கள் 3 பேரும் ஒரு பாதியில் இடம் பெற்றுள்ளதால் ஜோகோவிச்சும், பெடரரும் காலிறுதியில் மோதும் வாய்ப்புகள் அதிகம். ரஃபேல் நடாலும் முன்னேறி வந்தால், அரையிறுதியில் அவர் ஜோகோவிச் அல்லது பெடரரை எதிர்கொள்ள நேரிடும். பிரெஞ்ச் ஓபன் நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால், முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்பிரின்னை எதிர்த்து மோதுகிறார். மகளிர் ஒற்றையரில் நடப்பு சாம்பியனான போலந்தை சேர்ந்த ஈகா ஸ்வைடெக், முதல் சுற்றில் ஸ்லோவினியா வீராங்கனை காஜா ஜுவானை எதிர்த்து களம் இறங்குகிறார்.

Related Stories: