கெத்தை மின்வாரிய குடியிருப்பில் கொரோனா பரவல் அதிகரிப்பு-தாசில்தார், அதிகாரிகள் ஆய்வு

மஞ்சூர் : மஞ்சூர் அருகே உள்ள கெத்தை மின்வாரிய குடியிருப்பு பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா நோய்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 16 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. சுமார் 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.

எமரால்டு அருகே உள்ள கோத்தகண்டிமட்டம், காந்திகண்டி, காந்திகண்டிபுதுார், பெரியார்நகர், சுரேந்திரர்நகர்,  கண்டிமட்டம், கொட்டரகண்டி, சிவசக்திநகர், கோரகுந்தா பகுதிகளில் சுமார் 50கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை மின்வாரிய குடியிருப்பு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நுாற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொேரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் நேற்று முன்தினம் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று குந்தா தாசில்தார் மகேஸ்வரி தலைமையில் கிராமநிர்வாக அலுவலர் லதா மற்றும் வருவாய்துறையினர் கெத்தை மின்வாரிய பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் மின்நிலையம் மற்றும் அலுவலகப்பணிகளில் ஈடுபடும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வுகளை தாசில்தார் மகேஸ்வரி ஏற்படுத்தினார்.

மேலும் பிக்கட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய மருத்துவ அலுவலர் சாய்கிஷோர் தலைமையில் சமுதாய சுகாதார செவிலியர் கிருஷ்ணகுமாரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினரும் கெத்தைக்கு சென்று நோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். 20கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  இதை தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் தூய்மை பணியாளர்கள் மின்வாரிய குடியிப்பு பகுதியில் கிருமிநாசினி மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டார்கள்.

கெத்தை பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் தெரிவித்தார்.

Related Stories: