மாட்டிறைச்சிக்கு தடை, மதுவுக்கு அனுமதி; அறியாமை மிக்கவர்களால் அழிக்கப்படுகிறது லட்சத்தீவு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:நாட்டின் மிகச் சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவுகளின் நிர்வாகி தினேஷ்வர் சர்மா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பரில் காலமானார். பின்னர், தாத்ரா-நாகர் ஹவேலி மற்றும் டாமன்-டையு யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக உள்ள பிரபுல் படேல், லட்சத்தீவுகளின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பிரபுல் படேல் கொண்டு வந்த பல்வேறு நடைமுறை சீர்த்திருத்தங்கள் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளன. நிலவுரிமை சட்டத்தின்படி லட்சத்தீவை பூர்வீகமாக கொண்டதாய், தந்தையருக்கு பிறப்பவர்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும் என்ற உத்தரவை தளர்த்தி உள்ளார்.

லட்சத்தீவுகளின் பிரதான உணவுப் பட்டியலில் மாட்டிறைச்சி இடம்பெற்றுள்ள நிலையில் அவற்றுக்கு தடைவிதிப்பதற்கான முன்னெடுப்புகள், மதுவுக்கு அனுமதி தந்தது என பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘லட்சத்தீவு பெருங்கடலில் உள்ள இந்தியாவின் பொன்நகை. அது, அதிகாரத்தில் இருக்கும் அறியாமை மிக்கவர்களால் அழிக்கப்படுகிறது. லட்சத்தீவு மக்களுடன் நான் துணை நிற்கிறேன்’’ என கூறி உள்ளார்.

Related Stories: