மயிலாடுதுறையில் 50 படுக்கைகளுடன் கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம்-அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலம், விளையாட்டுத்றை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். 6 டன் அளவிலான திரவ ஆக்சிஜன் சேமிப்பு டேங்கரை பார்வையிட்டார், தடுப்பூசி போட்டுவரும் இடத்தினை பார்வையிட்டார், முன்களப்பணியாளர்களான மருத்துவர், செவிலியர் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை சந்தித்து ஊக்கப்படுத்தினார், சம்பள உயர்வு குறித்து கோரிக்கை வைத்ததற்கு தமிழக முதல்வர் இதுகுறித்து நல்ல அறிவிப்பை வெளியிட உள்ளார் என்றார். அதன்பிறகு மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் உள்ள புதிய கட்டிடத்தில் 50 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார்.

அவருடன் மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல்கண்காணிப்பாளர்நாதா, மாவட்டவருவாய் அலுவலர் முருகதாஸ், மயிலாடுதுறை எம்பி. ராமலிங்கம், நாகைவடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நிவேதாமுருகன் எம்எல்ஏ, மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உடனிருந்தனர்.

பின்னர் அமைச்சர் கூறுகையில்,’ மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 6 டன் ஆக்சிஜன் டேங்கர் அமைத்ததில் உள்ள பழுது சரிசெய்யப்பட்டு ஒருவாரத்தில் அது இயங்கப்படும் அதன்பிறகு மயிலாடுறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருக்காது. கடந்த 2 நாட்களாக பெருந்தொற்று குறைந்துள்ளது. விரைவில் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றார்.

சீர்காழியில் பேட்டி: சீர்காழி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், கொரோனா தொற்று காரணமான ஊரடங்கை விமர்சனம் செய்தவர்கள் ஒரு வாரத்திற்குபின் முதல்வரை பாராட்டுவார்கள். இந்த அளவிற்கு கடுமையான ஊரடங்கு என்பது உலகத்திலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.முதல்வர் உத்தரவின்படி விரைவில் தற்காலிக மருத்துவர்கள்,செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் தேவையான அளவு பணியமர்த்தபடுவார்ள் என்றார்.

கொள்ளிடத்தில் ஆய்வு: கொள்ளிடம் அருகே உள்ள புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்80 படுக்கை வசதிகளை கொண்ட கொரோனா சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. அந்த மையத்திற்கு சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அங்குள்ள மருத்துவ அதிகாரிகளிடம் அங்கு நோயாளிகளுக்கு செய்து தரப்படும் அடிப்படை வசதிகள், தரமான உணவு, மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் கையிருப்பு உள்ளிட்ட வசதிகளையும் மருத்துவர்கள் தேவைப்பட்டால் உடனடியாக தெரிவிக்கவும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போடும் பணி ஆய்வு: தரங்கம்பாடி பக்கம் உள்ள ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதில் இருந்து 44 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதை அமைச்சர் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதாவுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: