3 ஐபிஎஸ் அதிகாரிகள் பரிந்துரை அடுத்த சிபிஐ இயக்குநர் யார்? தேர்வு முறை குறித்து அதிருப்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த சிபிஐ இயக்குநர் பதவிக்கு 3 ஐபிஎஸ் அதிகாரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வு முறை குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.சிபிஐ இயக்குநர் பதவி கடந்த பிப்ரவரி 4ம் தேதியிலிருந்து காலியாக இருக்கிறது. சிபிஐ இயக்குநராக இருந்த ரிஷி குமார் சுக்லா ஓய்வு பெற்றபின் யாரையும் நியமிக்கவில்லை. அதற்கு பதிலாக கூடுதல் பொறுப்பாக கூடுதல் இயக்குநர் பிரவீண் சின்ஹாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, சிபிஐ இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன்சவுத்ரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோர் கொண்ட தேர்வுக்குழு நேற்று முன்தினம் டெல்லியில் கூடியது. 90 நிமிடங்கள் நடந்த குழுவின் ஆலோசனையில், மகாராஷ்டிராவின் முன்னாள் டிஜிபி சுபோத் குமார் ஜெய்ஸ்வால், சாஸ்த்ரா சீமா பால் இயக்குநர் கே.ஆர். சந்திரா மற்றும் உள்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் வி.எஸ்.கே. கவுமுதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

இவர்களில் இருந்து ஒருவர் சிபிஐ இயக்குநராக விரைவில் தேர்வு செய்யப்படுவார். சுபோத் குமார் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சிபிஐ இயக்குநரைத் தேர்வும் செய்யும் முறைக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரஞ்சன் சவுத்ரி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே போல, அரசு தரப்பில் பரிந்துரைக்கப்பட்ட 2 பேர் நீக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறி உள்ளார். ஆதிர் ரஞ்சன் அளித்த பேட்டியில், ‘‘சிபிஐ இயக்குநரை தேர்வு செய்யும் முறை கமிட்டியின் விதிமுறைகளுக்கு முரணாக இருக்கிறது. கடந்த 11ம் தேதி நான் 101 பேரின் பெயர்களை பரிந்துரைத்தேன். ஆனால், அதில் 10 பேரை பட்டியலிட்டனர், மாலை 4 மணிக்கு 6 பேர் மட்டுமே பட்டியலில் இருந்தனர். மத்திய பணியாளர் பயிற்சித்துறையின் அணுகுமுறை கண்டிக்கத்தக்கது” எனத் தெரிவித்தார்.

தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், ‘‘எல்லை பாதுகாப்பு படை தலைவர் ராகேஷ் அஸ்தானா மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி.மோடி ஆகியோரின் பெயர்களையும் அரசு பரிந்துரைத்தது. இதில் அஸ்தானா ஜூலை 31ம் தேதியும், மோடி வரும் 31ம் தேதியும் ஓய்வு பெறுகின்றனர். விதிமுறைப்படி, ஓய்வு பெற குறைந்தபட்சம் 6 மாதம் உள்ள அதிகாரிகளை சிபிஐ பதவிக்கு நியமிக்கக் கூடாது. அதனால் அஸ்தானா, மோடி ஆகியோர் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் பரிந்துரையில் இருந்து நீக்கப்பட்டனர்’’ என்றார்.

Related Stories: