பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெற்றி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் முதலாவது தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா வெற்றி பெற்றுள்ளார். பாரிசில் நேற்று நடந்த தகுதி சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை ரோடியோநோவாவை எதிர்த்து, அங்கிதா ரெய்னா மோதினார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது அங்கிதா 183ம் இடத்திலும், ரோடியோநோவா 168ம் இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் செட்டில் சற்று பதற்றமாக காணப்பட்ட அங்கிதா, சர்வீஸ்களில் அடுத்தடுத்து தவறுகளை செய்தார். பிளேஸ்மென்ட்களும் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இதனால் அந்த செட்டை 3-6 என்ற கணக்கில் அங்கிதா பறிகொடுத்தார்.

போட்டி கையை விட்டு போகிறது என்ற நிலையில் 2ம் செட்டின் துவக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த அங்கிதா, முதலில் சர்வீஸ்களில் வேகத்தை கூட்டினார். சர்வீஸ்களில் பந்து சரியான இடங்களில் விழ, ரோடியோநோவா திணறினார். அந்த செட்டில் அவரால் ஒன்றுமே செய்ய முடியமால் மொத்தமாக சரணடைந்து விட்டார். இதனால் 6-1 என்ற கணக்கில் அந்த செட்டை அங்கிதா கைப்பற்றினார். 3ம் செட்டில் இருவருமே நிதானமாக ஆடினர். அவரவர் சர்வீஸ்களை இருவருமே தக்க வைத்துக்கொண்டு முன்னேறினர். ஆனால் சரியான நேரத்தில் ரோடியோநோவாவின் ஒரு கேமை பிரேக் செய்தார் அங்கிதா.

அதன் பின்னர் அவர் தனது கேம்களை விட்டுக் கொடுக்காமல் முன்னேறி, அந்த செட்டை 6-4 என கைப்பற்றி, 3-6, 6-1, 6-4 என 3 செட்களில் இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். முதல் செட்டை பறி கொடுத்த பின்னரும், அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி, வெற்றி பெற்ற அங்கிதாவுக்கு, ரோடியோநோவா பாராட்டு தெரிவித்தார். அடுத்த தகுதி சுற்றுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் தரவரிசையில் தற்போது 110ம் இடத்தில் உள்ள பெல்ஜியம் வீராங்கனை கிரீட் மின்னனை எதிர்த்து, அங்கிதா மோதவுள்ளார்.

Related Stories: