நாடு முழுவதும் அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோய்!:குஜராத் 4,640, மகாராஷ்டிராவிற்கு 4,060 மருந்து குப்பிகளை ஒதுக்கியது மத்திய அரசு..!!

டெல்லி: கருப்பு பூஞ்சை நோய்க்கு பயன்படுத்தப்படும் 19,420 AMPHOTERICIN-B மருந்து குப்பிகளை மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா ஏற்படுத்திய அச்சம் தீராத நிலையில் கருப்பு பூஞ்சை நோய் புதிய அச்சுறுத்தலாக இருக்கிறது. இதனால் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க தேவைப்படும் AMPHOTERICIN-B மருந்துக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் 22 மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் நிறுவனங்களுக்கு ஊடுதலாக 19,420 AMPHOTERICIN-B மருந்து குப்பிகளை அனுப்பி வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலின் படி, கருப்பு பூஞ்சை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்திற்கு 4,640 குப்பிகளும், மஹாராஷ்டிராவிற்கு 4,060 குப்பிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு 100 மருந்து குப்பிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மியூகோர்மைகோசிஸ் எனும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சை.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு அதிக அளவாக கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. அவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories: