இந்திய வங்கியில் பெரும் தொகையை கடனாக பெற்றுவிட்டு ஆண்டிகுவாவில் தஞ்சம் அடைந்த மெகுல் சோக்சியை காணவில்லை!: ஃகியூபாவிற்கு தப்பியிருக்கலாம் என தகவல்..!!

ஆண்டிகுவா: இந்திய வங்கியில் பெரும் தொகையை கடனாக பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய மெகுல் சோக்சி ஆண்டிகுவாவில் திடீரென காணாமல் போய் விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தது சில ஆண்டுகளுக்கு முன்பாக வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, நீரவ் மோடியும், மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பியோடிவிட்டனர். நீரவ் மோடி லண்டனில் அடைக்கலம் புகுந்த நிலையில், சோக்சி ஆண்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்ததுடன் கடந்த 2018ம் ஆண்டில் அந்நாட்டின் குடியுரிமையையும் பெற்றுக்கொண்டார். அவர்கள் இருவரையும் விசாரணைக்கு இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆண்டிகுவா நாட்டில் இருந்து மெகுல் சோக்சி திடீரென காணாமல் போய்விட்டதாக அவரது வழக்கறிஞர் விஜய் பிரபாகரன் கூறினார். மெகுல் சோக்சியை அவரது குடும்பத்தினர் ஆண்டிகுவா காவல்துறையினர் மூலம் தீவிரமாக தேடி வருவதாகவும் வழக்கறிஞர் விஜய் கூறியுள்ளார். இதனிடையே இந்திய விசாரணை அமைப்புகளிடம் இருந்து தப்பிக்கும் விதமாக மெகுல் சோக்சி ஃகியூபாவுக்கு தப்பி சென்று இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆண்டிகுவாவை போன்றே ஃகியூபாவிடமும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை ஒப்படைக்கும் ஒப்பந்தங்களை இந்தியா செய்துக்கொள்ளவில்லை என்பதால் மெகுல் ஃகியூபாவில் அடைக்கலம் புகுந்திருக்கலாம் என்று தெரிகிறது.

Related Stories: