ஆந்திராவின் முத்துகூறு கிராமத்தில் வழங்கப்பட்ட கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை: ஆயுஷ் ஆணையர் ராமுலு தகவல்

திருமலை:  ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த  நிலையில் நெல்லூர் மாவட்டம்,  கிருஷ்ணா பட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்தில் ஆனந்தய்யா என்பவர் நாட்டு மருந்தை தயார்  செய்து லேகியமாக வழங்கி வந்தார். இதில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கும், வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கவும்  6 விதமான மூலிகை பொருட்களை கொண்ட லேகியத்தை வழங்கி வந்தார்.  ஆக்சிஜன் மூலம் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கண்களில் மூலிகை  பொருட்களால் தயார் செய்த திரவத்தை  விட்டதன் மூலம் சில மணி நேரங்களிலேயே ஆக்சிஜன் தேவை இல்லாத நிலைக்கு வந்தனர்.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வந்தவர்கள் கூட ஆனந்தய்யாவின் மருந்தை பெறுவதற்காக கூட்டமாக திரண்டனர்.   பொதுமக்களிடம் ஆனந்தய்யாவின்  மருந்துக்கு பெரும் வரவேற்பு ஏற்பட்ட நிலையில், இந்த மருந்தை பெறுவதற்காக முத்துக்கூறு கிராமத்திற்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  கொரோனா நோயாளிகள் திரண்டனர். இதையடுத்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன், ஆயுர்வேத லேகியத்தை ஆய்வு செய்து அறிக்கை சம்ர்ப்பிக்க அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். அதன்பேரில் அதிகாரிகள் ஆயுர்வேத லேகியத்தை மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டனர்.  அதன் பின்னர், ஆயுஷ் ஆணையாளர் ராமுலு தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆனந்தய்யா தயார் செய்த லேகியத்தை ஆய்வுக்கு  உட்படுத்தி உள்ளனர். மேலும், ஐசிஎம்ஆர் குழுவினரும் விரைவில் சோதனை மேற்கொள்ளவுள்ளனர்.

இதுகுறித்து ஆயுஷ் ஆணையர் ராமுலு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘கிருஷ்ணா பட்டணம் ஆனந்தய்யா மருந்து குறித்து 6 நாட்களில்   இறுதி அறிக்கை வழங்கப்படும். மேலும், சட்டப்படி இது ஒரு ஆயுர்வேத மருந்து அல்ல. நாட்டு மருந்தாக கருதப்படும். ஆயுர்வேத மருந்தா  என்பது குறித்து மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே  கூற முடியும். ஆனந்தய்யா மருந்தில் பயன்படுத்தப்படும்  மூலிகைகள் ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த லேகியத்தில்  தீங்கு விளைவிக்கும் பொருட்கள் எதுவும் இல்லை.  ஆனந்தய்யா வழங்கிய மருந்தால் பயனடைந்ததாக பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்’’ என்றார்.

திருப்பதி தேவஸ்தானம் மூலம் விநியோகிக்க தயார்

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கூறுகையில், ‘‘ஆனந்தய்யா தயார் செய்து வழங்கிய  லேகியத்தின் மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைந்து இருப்பதாக  பயன்படுத்தியவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும்,  முதல்வர் ஜெகன் மோகன் இந்த லேகியத்தின் மூலம் வேறு ஏதும் பிற்காலத்தில் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து ஆய்வுக்கு  உத்தரவிட்டுள்ளார். இந்த ஆய்வு அறிக்கை வந்த பிறகு எந்த வித பக்கவிளைவுகளும் இல்லை என்று தெரியவந்தால், திருமலை திருப்பதி  தேவஸ்தானத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் சித்த மருத்துவமனை மூலம் ஆனந்தய்யாவின் லேகியம் தயார் செய்து மாநிலம்  முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும்’’ என்றார்.

Related Stories: