நாங்குநேரி பகுதியில் தரமற்ற விதையால் 90 நாட்களை கடந்தும் காய்க்காத தக்காளி செடிகள்: விவசாயிகள் கடும் பாதிப்பு

நாங்குநேரி: நாங்குநேரி அருகே 90 நாட்களை கடந்தும் காய்க்காத தக்காளி செடிகளால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். தரமற்ற விதையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நஷ்டஈடு வழங்க வலியுறுத்தியுள்ளனர். நாங்குநேரி பகுதியிலுள்ள சிங்கநேரி. காரங்காடு, புத்தநேரி, இறைப்புவாரி, அரியகுளம்,  செண்பகராமநல்லூர். பிள்ளைகுளம், உன்னகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் கத்தரி, தக்காளி, வெண்டை, சீனிஅவரை, பாகற்காய், புடலங்காய், பூசணிக்காய், மிளகாய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டுள்ளனர். இவற்றில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் உரிய காலங்களில் தக்காளி காய்க்காமல் மலட்டுத் தன்மையுடன் காணப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக தக்காளி விதைத்த 40 முதல் 60 நாட்களுக்குள் மகசூல் அளிக்கும். ஆனால் தற்போது பயிரிட்டுள்ள செடிகள் 90 நாட்களை கடந்தும் பூக்கள் பூத்து உதிர்ந்து காய்களின்றி வெறும் செடிகளாகவே காட்சியளிக்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கீழபுத்தநேரியை சேர்ந்த விவசாயி வெட்டும்பெருமாள் கூறுகையில்,  கடைகளில் விற்கப்படும் சான்றளிக்கப்பட்ட காய்கறி விதைகளை வாங்கி வந்து நாற்றுப்பாவி செடிகளை நடுவது வழக்கம். இந்த ஆண்டு அவ்வாறு பயிரிட்ட தக்காளி செடிகள் 90 நாட்களைக் கடந்தும் காய்க்காமல் மலட்டுத் தன்மையுடன் உள்ளன.

இதனால் உரம், பூச்சிமருந்து உள்ளிட்ட பல்வேறு இடுபொருள் செலவுகளுக்காக சுமார் ரூ.50 ஆயிரம்  வரை செலவிட்டு  ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ள தக்காளி செடிகள் மகசூல் தராமல் மலடாகி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே வேளாண் மையங்களின் மூலம் தரமான காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு வழங்கவும், தற்போது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மூலைக்கரைப்பட்டி வட்டாரத்தில் தெய்வநாயகப்பேரி, மலையன்குளம், அம்பலம், கல்லத்தி, எடுப்பல் உள்ளிட்ட பல்வேறு பகுதி வயல்களில் தெளிக்கப்பட்ட களைக்கொல்லி மருந்துகள் முறையாக செயல்படாததால் களைகள் கட்டுப்படாமல் முளைத்ததால் பயிர்களை வீணடித்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் உளுந்து, தட்டைப்பயறு, காய்கறிகள் பயிரிட விவசாயிகள் போதிய விளைச்சலின்றி பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். எனவே நாங்குநேரி தாலுகாவில் வினியோகிக்கப்படும் விவசாயம் சார்ந்த பூச்சி மருந்துகள், உரங்கள், விதைகளை சோதனை செய்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்,  நஷ்டமடைந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இந்திய கிசான் சபை விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: