ரூ.3.5 கோடி கொள்ளை: பாஜ, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளிடம் விசாரணை

திருவனந்தபுரம்: கேரள  மாநிலம் திருச்சூர் அருகே கொடக்கரை அருகே கடந்த ஏப்ரல் 20ம் தேதி நள்ளிரவு  சென்று கொண்டிருந்த ஒரு கார் மீது மற்றொரு கார் மோதியது. இதையடுத்து,  பின்னால் வந்த காரில் வந்தவர்கள் தங்களிடம்  இருந்த ரூ.20 லட்சம் பணம் மற்றும்  காரை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறி, ஒருவர் கொடக்கரை போலீசில்  புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரித்து வந்தனர். இதில் காரில் இருந்தது ₹3.50 கோடி  பணம் எனவும், அது  பாஜவின் தேர்தல் செலவுக்காக கொண்டு வரப்பட்ட பணம் எனவும் தெரியவந்தது.  கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்த பணம் கேரளாவுக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில்  விநியோகிக்க  இந்த பணம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பணம் கொண்டு வரப்படுவதை  அறிந்த பாஜவினர் சிலரே அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி  சம்பவத்தன்று அந்த காரை பின்தொடர்ந்த பாஜவினர் சிலர், தாங்கள் வந்த காரால்  மோதி பணத்தை கொள்ளையடித்து  சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக பணத்தை  கொடுத்தனுப்பிய பாஜவின் இளைஞரமைப்பான யுவ மோர்ச்சா முன்னாள் மாநில  பொருளாளர் சுனில் நாயக், பணத்தை கொண்டு சென்ற கோழிக்கோடு பகுதியை சேர்ந்த  பாஜ நிர்வாகி தர்மராஜன் ஆகியோரிடம்  போலீசார் நடத்திய விசாரணையில் இந்த  விஷயம் தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் விசாரணைக்காக, திருச்சூரை  சேர்ந்த பாஜ மாவட்ட நிர்வாகிகள் 2 பேர் மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகி  ஆகியோரிடம் நேற்று போலீசார் விசாரணை  நடத்தினர்.

Related Stories: