கேரளாவில் தேர்தல் தோல்வி எதிரொலி: ரமேஷ் சென்னித்தலாவிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிப்பு

திருவனந்தபுரம்:  கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ரமேஷ் சென்னித்தலாவிடமிருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக சதீசன்  நியமிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவில் கடந்த மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ் கூட்டணிக்கு 41 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. கடந்த 2016ம் ஆண்டு நடந்த  தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரள வரலாற்றில் இதுவரை காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணிகள் மாறி மாறி ஆட்சி செய்து வந்தன.  ஆனால் வழக்கத்திற்கு மாறாக இடதுசாரி கூட்டணி அதிக இடங்களில்  வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. காங்கிரஸ்  கட்சியில் நிலவிய கோஷ்டிப் பூசல் தான் தோல்விக்கு காரணம் என்று பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ரமேஷ் சென்னித்தலாவை மாற்றிவிட்டு புதிய ஒருவரை நியமிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சிக்குள் கோரிக்கை வலுத்தது. இதுதொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ்  மூத்த தலைவர்கள் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவராக சதீசனை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் நேற்று திருவனந்தபுரத்தில்  அதிகாரபூர்வமாக அறிவித்தார். காங்கிரஸ் மேலிடத்தின் முடிவை தான் ஏற்றுக்கொள்வதாக ரமேஷ் சென்னித்தலா கூறியுள்ளார். இதற்கிடையே, கேரளாவில் 15வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் நாளை  (24ம் தேதி) தொடங்குகிறது. நாளை மறுநாள் (25ம் தேதி) புதிய சபாநாயகர்  தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்

Related Stories: