போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வரவேற்பு

தூத்துக்குடி:  தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்கள் 3-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அரசின் விதிகளுக்கு உட்பட்டு இன்று காலை 6.30 மணியளவில் துவங்கி காலை 10 மணிக்குள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு அறவழி தொடர் போராட்டங்கள் நடைபெற்ற, மக்கள் பங்கெடுத்த குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியாபுரம், பண்டாரம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பலியானவர்கள் படங்களுக்கு பகுதி மக்கள் சார்பிலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பிலும் மலர்தூவி அஞ்சலியும், அவர்கள் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதையடுத்து, 6 ஏ.டி.எஸ்.பி.கள், 12 டி.எஸ்.பிகள், 55 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீதான மத்திய புலனாய்வு வழக்கை தமிழக அரசு நேற்று வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இதற்கு, எதிர்ப்பாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் மற்றும் உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டவர்களுக்கும், இழக்கப்பட்டவர்களுக்கும் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட வேலை என்பது கல்வித்தகுதி அடிப்படையில் இல்லை. அதனால், புதிதாக பொறுப்பேற்ற தமிழக அரசிடம் கல்வி தகுதி அடிப்படையில் பணி வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். எங்களது கோரிக்கையை மனிதநேயத்துடன் பரிசீலித்து ஒவ்வொருவரின் கல்வித்தகுதியின் அடிப்படையில் 17 பேருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமண ஆணை வழங்கியுள்ளார். இது எங்களுக்கும், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதியின்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படியே, வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது என்றார்.

Related Stories: