இங்கிலாந்தில் செப்டம்பரில் ஐபிஎல் எஞ்சிய போட்டிகள்?.. டெஸ்ட் அட்டவணையில் மாற்றம் செய்ய பிசிசிஐ கோரிக்கை

மும்பை: கொரோனா பரவல் காரணமாக 14வது ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில் எஞ்சிய 31 போட்டிகளை செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்கிறது. ஜூன் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலில் நியூசிலாந்துடன் மோதுகிறது. தொடர்ந்து இங்கிலாந்துடன் 5 டெஸ்ட்டில் ஆட உள்ளது. இந்த தொடர் ஆகஸ்ட் 4ம்தேதி தொடங்கி செப்.14ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-8ம்தேதி வரை ட்ரெண்ட் பிரிட்ஜ், 2வது டெஸ்ட் லார்ட்சில் ஆக. 12-16, 3வது டெஸ்ட் ஹெடிங்லியில் ஆக.25-29, 4வது டெஸ்ட் தி ஓவலில் செப். 2-6, கடைசி டெஸ்ட் ஓல்ட் டிராஃபோர்ட் நகரில் செப் 10-14ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் தொடருக்காக டெஸ்ட் தொடர் அட்டவணையில் மாற்றம் செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் பிசிசிஐ வலியுறுத்தி உள்ளது. செப்.6ம்தேதிக்குள் டெஸ்ட் தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அவ்வாறு தொடரை ஒருவாரத்திற்கு முன்பே முடித்தால் ஐபிஎல் தொடரை நடத்த 3 வார காலம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனிடையே பிசிசிஐயின் கோரிக்கையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. பி.சி.சி.ஐ உடன் நாங்கள் தொடர்ந்து பேசுகிறோம்.

ஆனால் தேதிகளை மாற்றுவதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கை எதுவும் வரவில்லை. 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என இங்கிலாந்து வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் எஞ்சிய போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் பிசிசிஐக்கு ரூ.2500 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: