சின்னமனூர் பகுதியில் வரத்து குறைவால் முருங்கை விலை உயர்வு

சின்னமனூர் : சின்னமனூர் பகுதியில் முல்லைப் பெரியாறு பாசனம் மற்றும் நிலத்தடி நீர்பாசனத்தின் மூலம் நெல் முதல் செங்கரும்பு, ஆலை கரும்பு ,திராட்சை, வாழை,  காய்கறிகள் என  தொடர் சாகுபடி நடக்கிறது. சின்னமனூர் சுற்றுப்பகுதிகளில் விளைவிக்கப்படும் பொருட்கள், நகராட்சி அருகிலுள்ள ஏலச்சந்தைக்கு விற்பனைக்கு வரும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாா ஏலச்சந்தை மூடப்பட்டுள்ளது.

ஆனால் காலை 7 மணியிலிருந்து 10 மணி வரை விவசாயிகள் உற்பத்தி செய்யப்படுகின்ற காய்கறிகளை ரோட்டோரங்களில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.தற்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், காய்கறிகள் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. மேலும் காய்கறிகள் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வருகையின்றியும், வரத்து குறைவாலும், தேவை அதிகரிப்பாலும் காய்கறிகள் விலை எகிறியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய்  50 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறியும் இரு மடங்கு விலை கூடி உள்ளது.

மக்களுக்கு தேவையும் அதிகரித்துள்ளது. தொடர்மழையால் வரத்தும் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கு காலம் முடியும் வரை அனைவருக்கும் சற்று சிரமம் தான், என்றனர்.மேலும் காய்கறிகள் வாங்க வந்த குடும்பத்தலைவிகள் கூறுகையில், சின்ன வெங்காயம், முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து வகை காய்கறிகள் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இனிமேல் சாம்பாரில் முருங்கைக்காய், வெங்காயம் என எதுவும் இருக்காது, என்றனர்.

Related Stories: