கர்நாடகத்தில் ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட கோயில் திருவிழா!: ஒட்டுமொத்த கிராமத்தையும் சீல் வைத்த அதிகாரிகள்..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கை மீறி கொண்டாடப்பட்ட திருவிழாவால் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  ஒட்டுமொத்த கிராமத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. கதக் மாவட்டம் நற்குண்ட் அருகே உள்ள பனஹட்டி கிராமத்தில் ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டதை அந்த பகுதி மக்கள் விமர்சியாக கொண்டாடினர். வீதிகளில் திரண்ட அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் ஊற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கை மறந்து ஊர் எல்லையில் திரண்ட இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட்டு போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர். வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள், கோயில் திருவிழாவை காரணம் காட்டி வீதிகளில் குவிந்ததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகரித்தது. விதிகளை மீறியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கிராமத்தையும் தனிமைப்படுத்தும் வகையில் சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

Related Stories: