21 நாள் தங்கி 2 டோஸ் போட்டு வரலாம் ரஷ்யாவுக்கு தடுப்பூசி டூர் 1.30 லட்சம் கட்டணம்

புதுடெல்லி: இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவும் நிலையில், ரஷ்யாவுக்கு தடுப்பூசி டூர் திட்டம் களைகட்டி உள்ளது. அங்கு 21 நாள் தங்கி 2 டோஸ் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டு வர கட்டணம் ரூ.1.30 லட்சம். அப்படியே ஊரையும் சுத்தி பாத்துட்டு வரலாம். உலகம் முழுவதும் தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியதுமே, கடந்த நவம்பர் மாதமே வெளிநாடுகளுக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளும் தடுப்பூசி டூரிஸம் இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கி விட்டன. ஆரம்பத்தில் அமெரிக்கா சென்று முதல் டோஸ் பைசர் தடுப்பூசி போட்டு வர 4 நாள் டூருக்கு ரூ.1.70 லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதன்பின் துபாயில் தடுப்பூசி போட அழைத்துச் சென்றனர். அங்கு கொரோனா பரவல் அதிகரித்ததால் இந்தியர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி டூரிஸத்தின் ஹாட்ஸ்பாட்டாக ரஷ்யா மாறியிருக்கிறது.

இந்தியாவில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலிருந்து தடுப்பூசி டூர் வருபவர்களுக்கு ரஷ்யா அனுமதி தந்துள்ளது. டெல்லியை சேர்ந்த சில டூரிஸம் நிறுவனங்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து தருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ரஷ்யாவில் 21 நாட்கள் தங்கியிருந்து 2 டோஸ் தடுப்பூசியை போட்டு வரலாம் என்பதுதான். இதற்கான கட்டணம் ரூ.1.30 லட்சம் வசூலிக்கப்படுகிறது. விமான டிக்கெட் கட்டணம் உட்பட. விசா கட்டணமாக தனியாக ரூ.10,000 வசூலிக்கப்படுகிறது. டிராவல் ஏஜென்சியினர் கூறுகையில், ‘‘ரஷ்யாவின் விமான ஏர்லைன்ஸ் மூலமாக அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோ அழைத்துச் செல்வோம். அங்கு இறங்கிய அடுத்த நாளே முதல் டோஸ் தடுப்பூசி போடப்படும். 3 நாட்கள் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் தங்கி சுற்றிப் பார்க்கலாம். மற்ற நாட்களில் மாஸ்கோவில் தங்கியிருக்க வேண்டும். 21வது நாளில் 2வது தடுப்பூசி போட்டு அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வரப்படுவர்’’ என்றார்.

இந்த டூருக்கு ஒரே நிபந்தனை, பிசிஆர் பரிசோதனையில் கொரோனா நெகடிவ் என சான்றிதழ் தர வேண்டும் என்பது மட்டுமே.

டாக்டர்களே அதிகம் பறக்கின்றனர்

டிராவல் ஏஜென்சியினர் கூறுகையில், ‘‘இந்தியாவில் தடுப்பூசியே கிடைக்காததால் ரஷ்ய தடுப்பூசி டூருக்கு அதிகளவில் டாக்டர்களே வருகின்றனர். முதல் குழுவை கடந்த 15ம் தேதி அனுப்பினோம். அதில் பெரும்பாலும் குருகிராமைச் சேர்ந்த டாக்டர்களே இருந்தனர். 2வது குழு வரும் 29ம் தேதி மாஸ்கோ செல்ல உள்ளது. ஜூன் மாதத்தில் ரஷ்யா டூர் செல்ல இப்போதே முன்பதிவு செய்கின்றனர்’’ என்றனர்.

Related Stories: