துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜ பெண் பிரமுகர்: வைரலாகும் வீடியோ; போலீஸ் விசாரணை

கோவை: முக நூல் பக்கத்தில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்த பாஜ பெண் பிரமுகர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ  வானதி சீனிவாசனின்  தீவிர ஆதரவாளரான இளம்பெண் ஒருவர் துப்பாக்கியுடன் கணவர் பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக்கொண்டார். கணவரின் பிறந்த நாளை முன்னிட்டு அந்தப்பெண்  துப்பாக்கியுடன் நின்று போட்டோ எடுத்து உள்ளதாக தெரிகிறது.‌ இந்த போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

இவை, வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பலர், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், கோவை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த பாஜ பெண் பிரமுகர், துப்பாக்கி உரிமம் வைத்துள்ளாரா? யாரையேனும் மறைமுகமாக மிரட்டும் நோக்கத்தில் இப்படி சமூக வலைதளங்களில் போட்டோ வெளியிட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது, பல ரவுடிகள், பட்டா கத்தியுடன் கேக் வெட்டுவது போன்ற போட்டோக்களை, சமூக வலைதளங்களில் பதிவிட்டபோது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில் தற்போது  இந்த விவகாரம் தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>