50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜல்லி குவாரிகளை திறக்க வேண்டும்: முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் முனிரத்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 30 நாட்களாக கட்டுமான தொழில்கள்  முடங்கி உள்ளன. 50 லட்சம் கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். மணல், கருங்கல் ஜல்லி, சிமென்ட் போன்ற கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லும் சுமார் 75 ஆயிரம் லாரிகள் இயங்காத காரணத்தினால் அதன் உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள், கருங்கல், ஜல்லி குவாரிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் சுமார் 5 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமான கட்டுமான தொழில்கள், கட்டுமான பொருட்கள் இல்லாமல் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் 50 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கருங்கல் ஜல்லி குவாரிகளை இயக்க மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: