மாதாந்திர மின் கணக்கீடுக்கும் ஏற்பாடு மின்கட்டண குளறுபடியை களைய நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கரூர்: மின் கட்டணம் செலுத்துவதில் குளறுபடி களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் கரூர் டிஎன்பிஎல் காகித ஆலை நிறுவனத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, ஆலையின் செயல் அலுவலர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  பின்னர் அமைச்சர் செந்தில்பாலாஜி அளித்த பேட்டி:

கரூர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கிடையாது. ஆக்சிஜன் தேவைப்படுவோர்களுக்கு கூடுதலாக மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அதற்கான ஏற்பாடுகள் டிஎன்பிஎல் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்கள் இத்தாலியில் இருந்து இந்த மாத இறுதிக்குள் வந்து விடும். ஜூன் 2வது வாரத்தில் அதற்கான உற்பத்தி தொடங்கப்படும். மின் கட்டணம் செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் குளறுபடிகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின் நுகர்வோர்களிடம் கூடுதல் வைப்புத்தொகை வசூலிக்க கூடாது என கடந்த 10ம்தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாதாந்திர மின் கணக்கீடு உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த படிப்படியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: