காங்கிரஸ் முன்னாள் எம்பி துளசி அய்யா வாண்டையார் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தஞ்சை: தஞ்சை அருகே பூண்டியை சேர்ந்தவர் துளசி அய்யா வாண்டையார் (93). இவர், வீரையா வாண்டையார் புஷ்பம் கல்லூரி தாளாளராக இருந்து வந்தார். தஞ்சை மாவட்டத்தில் ஏராளமான பட்டதாரிகளை உருவாக்கியதால் இவருக்கு கல்வி தந்தை, கல்வி வள்ளல் என்ற பெயர்களும் உள்ளது. சுதந்திர போராட்ட தியாகியான இவர், 1991ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்துள்ளார்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் சில தினங்களுக்கு முன் உடல்நல குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை துளசி அய்யா வாண்டையார் மரணமடைந்தார். இதையடுத்து, சொந்த ஊரான தஞ்சை அருகே பூண்டிக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. பின்னர் இரவு 7 மணியளவில் பூண்டியில் தகனம் செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின் இரங்கல்: அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: டெல்டா மாவட்ட மக்களால் ‘கல்விக் கண் திறந்த வள்ளல்’ எனக் கொண்டாடப்படும் சுதந்திரப் போராட்ட வீரரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கி.துளசி அய்யா வாண்டையார் மறைவெய்திய செய்தியறிந்து ஆற்றொணாத் துயரம் கொண்டேன். இவர்களது கல்விப் பணியால், நெற்களஞ்சியமான தஞ்சைத் தரணி, அறிவுக் களஞ்சியமாகவும் வளர்ந்து செழித்துள்ளது என்றால் மிகையாகாது. அவரது மறைவு டெல்டா மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கே பேரிழப்பாகும்.

Related Stories: