மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி: ஒரு வாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், குணமடைந்து வீடு திரும்பினார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி சட்டசபை தேர்தலில் வென்ற நிலையில் முதல்வராக கடந்த 7ம்தேதி ரங்கசாமி பதவியேற்றார். அடுத்த சில நாட்களில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகவே சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஒருவாரமாக சிகிச்சையில் உள்ள ரங்கசாமி இன்று பிற்பகல் (17ம்தேதி) அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள், ஊழியர்களுக்கு புதுவை முதலமைச்சர் ரங்கசாமி நன்றி தெரிவித்தார்.

பின்னர் டாக்டர்களின் அறிவுறுத்தலின்பேரில் ஒருவாரம் திலாஸ்பேட்டையில் உள்ள வீட்டில் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள உள்ளார். மேலும், புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணி உள்பட பல்வேறு பணிகள் ெதாடர்பாக அவர் தொலைபேசி வாயிலாக தலைமை செயலர், சுகாதாரத்துறை செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் பாஜகவின் சில தன்னிச்சையான செயல்பாடுகளால் தேஜ கூட்டணிக்குள் குழப்பம் நிலவி வருகிறது.  நியமன எம்எல்ஏக்கள் விவகாரம், புதிய அமைச்சரவை, இலாகாக்கள் ஒதுக்கீடு, தற்காலிக சபாநாயகர் பதவியேற்பு, எம்எல்ஏக்கள் பதவியேற்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து என்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் அவர் இன்று ஆலோசிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வௌியாகி உள்ளது.

தற்போது வரை கூட்டணிக்குள் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்று என்ஆர் காங்கிரசில் சில எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அவர்களுடன் விவாதித்தபின் முக்கிய முடிவுகளை முதல்வர் ரங்கசாமி தடாலடியாக எடுக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: