ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கும் அறிவிப்பு, இன்று முதல் அமலுக்கு வந்தது : மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு!!

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 குறைக்கும் அறிவிப்பு, இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து, கடந்த 7ம் தேதி தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அதன்பிறகு, சென்னை தலைமை செயலகத்திற்கு  வந்த அவர், ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.

அதில், தேர்தல் பிரசாரத்தின்போது அறிவித்த முக்கியமான ஒன்றான ஆவின் பால் விலை குறைப்பு. அதன்படி ஆட்சியில் அமர்ந்தவுடன் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து அரசாணையில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். இது  வரும் 16ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அவர் அறிவித்தார். அதன்படி இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இந்த அரசாணைக்கு ஏற்ப பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக இன்று முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து பெற்றுக் கொள்ளலாம்.

புதிய விலை பட்டியலின்படி சமன்படுத்தப்பட்ட பால் 1000 எம்டி (டிஎம்) 43 லிருந்து 40, 500 எம்டி (டிஎம்) 21.50லிருந்து 20, நிலைப்படுத்தப்பட்ட பால் 500 எம்எல் (எஸ்எம்) 23.50லிருந்து 22 ஆகவும், நிறை கொழுப்பு பால் 500எம்எல் (எப்சிஎம்) 25.50லிருந்து 24 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 எம்எல் (டிடிஎம்) 20 லிருந்து 18.50 ஆகவும், டீமேட் 1000 எம்எல் 60லிருந்து 57 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல் பால் அட்டை விலை குறைப்பு பட்டியலின்படி சமன்படுத்தப்பட்ட பால் 1000 எம்எல் (டிஎம்) 40லிருந்து 37 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் 500எம்எல் (டிஎம்) 20லிருந்து 18.50, நிலைப்படுத்தப்பட்ட பால் 500எம்எல் (எஸ்எம்) 22.50லிருந்து 21, நிறை கொழுப்பு பால் 500எம்எல் (எப்சிஎம்) 24.50லிருந்து 23, இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் 500 (டிடிஎம்) 19.50லிருந்து 18 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து ஆவின் நிர்வாகம் கூறுகையில்: கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் இன்று முதல் லிட்டர் ஒன்றுக்கு 3 விலை குறைத்துள்ளது. எனவே தரமான ஆவின் பாலை குறைந்த விலையில் பெற்று பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். மேலும் புதிய முகவர் நியமனம், சிறப்பு தேவைப்பால் மற்றும் பால் உபபொருட்கள் தேவைக்கு தொலைபேசி எண்கள் 04362 -255379 / 256588, 9443709636, 8807983824, 9443914498 தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Related Stories:

>