2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டவர்கள் வீட்டிலும், பொது இடத்திலும் மாஸ்க் அணிய தேவையில்லை, சமூக இடைவெளியையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முக்கிய ஆயுதமாக மாஸ்க் கருதப்படுகிறது. தடுப்பூசியே போட்டாலும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும். 6 அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள்  வலியுறுத்துகின்றன.

ஆனால், உலகிலேயே கொரோனாவால் மிக அதிகமான பாதிப்பையும் பலியையும் சந்தித்துள்ள அமெரிக்கா, முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க் அணிய தேவையில்லை என அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்நாட்டின்  நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி நேற்று விடுத்த அறிவிப்பில், ‘‘முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். 6  சமூக  இடைவெளியையும் பின்பற்ற தேவையில்லை.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மாஸ்க் அணியாமல்  இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்’’ என கூறி உள்ளார். மேலும், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளான மருத்துவமனைகள், பொது போக்குவரத்து, விமானங்கள், விமான நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் வீடுகள் இல்லாத தங்கும் இடங்களில் தொடர்ந்து முக்கவசம் அணிய வேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

* அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் 46 சதவீதம் பேர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுள்ளனர். அதாவது, சுமார் 15 கோடியே 40 லட்சம் பேருக்கு  முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

* 11 கோடியே 70 லட்சம் பேருக்கு 2 டோஸ்களையும் போட்டுள்ளனர்.

*  சுமார் 60 சதவீத இளைஞர்கள் தடுப்பூசியின் முதல் அல்லது 2 டோஸ்களையும் போட்டுள்ளனர்.

* அமெரிக்காவில் கொரோனாவுக்கு 5 லட்சத்து 80 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

12 வயதினருக்கு தடுப்பூசி

இதற்கிடையே, அமெரிக்காவில் 12-15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. பல சிறுவர்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். அரசே மாஸ்க் அணிய தேவையில்லை என  கூறிய போதும், அமெரிக்க முதியவர்கள் அதற்கு  தயாராக இல்லை. ‘‘இது அவசரமான முடிவு. அபாயத்தை ஏற்படுத்தக் கூடியது.  நாங்கள் வழக்கம் போல் மாஸ்க் அணியவே விரும்புகிறோம்’’ என பெரும்பாலான  முதியவர்கள் கூறி  உள்ளனர்.

மகத்தான நாள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘‘இது மகத்தான மைல்கல், மகத்தான நாளாக கருதுகிறேன். ஓராண்டாக கொரோனாவுக்கு எதிராக போராடி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம். அதே சமயம் முழுமையாக தடுப்பூசி போடாதவர்கள்  கட்டாயம் மாஸ்க் அணியுங்கள். முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் மாஸ்க்கை கழற்றுங்கள். மற்றவர்களை புன்னகையுடன் வரவேற்றிடுங்கள்’’ என்றார்.

Related Stories: