ரம்ஜான் நாளிலும் குண்டு மழை: காசா மீது இஸ்ரேல் பீரங்கி தாக்குதல்: பலி 119 ஆக அதிகரிப்பு

காசா: ரம்ஜான் திருநாளிலும் காசா மீது குண்டு மழை பொழிந்த இஸ்ரேல், பீரங்கி தாக்குதல் நடத்தி பல பதுங்கு குழிகளை அழித்தது. இந்த தாக்குதலில் பலி 119 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு ஜெருசலேமில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றும் நடவடிக்கை , அல் அக்சா மசூதியில் வருவதற்கு கட்டுப்பாடு விதித்ததாலும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகளிடையே சண்டை நடந்து வருகின்றது.  5வது நாளாக நேற்றும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாதிகள் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை நடத்தினார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு காசா பகுதிகளில் இஸ்ரேல் தரைப்படை பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதனால் எல்லையோரம் வசிக்கும் மக்கள் வீடுகளில் முடங்கினர். ரம்ஜான் தினத்திலும் சண்டை ஓயாததால் காசா தெருக்கள் வெறிச்சோடி  கிடந்தன. எல்லையில் ஹமாசின் பல பதுங்கு குழிகளை அழித்துள்ள இஸ்ரேல் படைகள் காசாவுக்குள் நுழைய உள்ளது. இதுவரை ஹமாஸ் 1800 ராக்கெட்களையும், இஸ்ரேல் ராணுவம் 600 ராக்கெட்களையும் ஏவி தாக்கி உள்ளன.

 இதில், 31 குழந்தைகள், 19 பெண்கள் உட்பட 119 பேர் பலியாகி உள்ளனர். 830 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் 20  பேர் மட்டுமே இறந்துள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய தீவிரவாத தாக்குதல் குறித்து நாளை விவாதிக்கும் என தூதரக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அமெரிக்கர்கள் தங்கள் இஸ்ரேல் பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய  வேண்டுமென அமெரிக்க அரசு வலியுறுத்தி உள்ளது.

Related Stories: