திருப்பத்தூரில் முடிதிருத்தும் தொழிலாளியின் குழந்தைகள் கொரோனா நிதியுதவியாக உண்டியல் சேமிப்பு பணம் -எஸ்பியிடம் வழங்கினர்

திருப்பத்தூர் : திருப்பத்தூரில் முடிதிருத்தும் தொழிலாளியின் 2 பெண் குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் பணத்தை கொரோனா நிதி உதவியாக எஸ்பி விஜயகுமாரிடம் வழங்கினர்.திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோடு பகுதியை சேர்ந்தவர் குமார்(38). இவர் அதே பகுதியில் முடிதிருத்தும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு அக்‌ஷயா (6), சந்தியா(4) என்ற 2 மகள்கள் உள்ளனர். தற்போது தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மக்கள் உயிருக்காக போராடி வருவதை சமூக வலைதளங்களிலும் நாள்தோறும் தொலைக்காட்சிகளிலும் பார்த்து வந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரண தொகையை அரசுக்கு அனுப்பலாம் என்று தெரிவித்திருந்தார். இதனால் அக்‌ஷயா தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த ₹604 மற்றும் சந்தியா சேமித்து வைத்திருந்த ₹491ஐ உண்டியலுடன் எடுத்துச்சென்று நேற்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் அலுவலத்திற்கு சென்று, எஸ்பி விஜயகுமாரிடம் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினர்.

பின்னர் எஸ்பி விஜயகுமார் அந்த குழந்தைகளிடம் உங்கள் ஆசைகள் என்ன என்று கேட்டறிந்தார். அப்போது அந்த குழந்தைகள் உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து மீள வேண்டும்.  அதற்காக நாங்கள் கடவுளிடம் நாள்தோறும் பிரார்த்தனை செய்கிறோம். எங்களால் முடிந்த இந்த பணத்தை கொரோனா நிவாரண தொகையாக வழங்குகிறோம் என்று தெரிவித்தனர்.

மேலும் நீங்கள் சேமிப்பு பணத்தை கொண்டு ஏதாவது பொருட்கள் வாங்க விரும்புகிறீர்களா? என்று எஸ்பி விஜயகுமார் குழந்தைகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் தற்போது நோயாளிகள் குணம் அடைந்தாலே போதும் என்று தெரிவித்தனர். நெகிழ்ந்து போன எஸ்பி குழந்தைகளை பாராட்டி எனது சொந்த வீட்டில் ஒருநாள் உங்களுக்கு விருந்து அளிக்கிறேன் என்று கூறி பாராட்டினார்.  

இதுகுறித்து எஸ்பி விஜயகுமார் கூறுகையில், ‘பிஞ்சு வயதிலேயே ஒருவருக்கு உதவக் கூடிய எண்ணம் இந்த குழந்தைகளுக்கு தோன்றியுள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்கது. குழந்தைகள் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக என்னிடம் அளித்துள்ளனர்.

அதனை நான் தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்க உள்ளேன். மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் வழங்குவோர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அறிவித்துள்ள வங்கி கணக்குக்கு நிவாரண தொகையை செலுத்தலாம் என்றார்.

Related Stories: