‘கொரோனாவால் நடத்த முடியவில்லை’ சேலத்தில் தனியார் பள்ளியை மூடுவதாக நிர்வாகம் அறிவிப்பு-பெற்றோர் முற்றுகை

சேலம் : சேலத்தில் கொரோனாவால் தனியார் பள்ளியை மூடுவதாக அறிவித்ததால், பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள அத்வைதா ஆசிரமம் சாலையில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவியதையடுத்து, மாநிலம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதன்படியே இப்பள்ளியும் மூடப்பட்டது.

ஆன்லைன் மூலம் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வகுப்பு நடத்தினர். ஒரு கல்வியாண்டு முடிந்தநிலையில், அடுத்த கல்வியாண்டு தொடங்க, தேர்ச்சி பட்டியலும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இப்பள்ளியின் நிர்வாகம் சார்பில் நேற்று முன்தினம், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோரின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தங்களால் பள்ளியை நடத்த முடியவில்லை.

பள்ளியை மூடுகிறோம். அதனால், தங்கள் குழந்தைகளின் டிசியை (மாற்றுச்சான்றிதழ்) வாங்கிச் சென்று வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள்,’’எனக்கூறப்பட்டிருந்தது. அத்துடன் நிலுவையில் உள்ள கல்விக்கட்டணத்தையும் பள்ளியில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த குறுஞ்செய்தியை படித்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பள்ளியின் ஆசிரியர்களுக்கு போன் செய்து விவரங்களை கேட்டறிந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை, 30க்கும் மேற்பட்ட பெற்றோர் பள்ளிக்கு திரண்டு வந்தனர். அவர்கள், பள்ளியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். ஆனால், பள்ளியில் அலுவலர்கள் யாரும் இல்லை. கேட்டை பூட்டிவிட்டு, காவலாளி மட்டும் இருந்தார். இதனால், யாரிடம் பேசுவது எனத்தெரியாமல் அங்கிருந்து புறப்பட்டனர்.

அப்போது பெற்றோர் கூறுகையில், ‘‘கொரோனாவால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். பள்ளி நிர்வாகத்தை நடத்த முடியவில்லை எனக்கூறி திடீரென மூடுவதால், இனி எந்த பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க முடியும். அதுவும் வேறு பள்ளிக்கு செல்லும் போது, புதிய சேர்க்கை எனக்கூறி டியூசன் பீஸ் கேட்பார்கள். இப்போது இருக்கும் கஷ்டத்தில், எப்படி பிள்ளைகளை வேறு பள்ளியில் அதிக கட்டணம் செலுத்தி சேர்க்க முடியும். அதனால், இந்த பள்ளியை தொடர்ந்து நடத்திட மாவட்ட கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

திடீரென பள்ளியை மூடுவதாக அறிவித்தது பற்றியும், தொடர்ந்து நடத்த வலியுறுத்தியும் சேலம் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கோரிக்கை மனுவை பெற்றோர் தரப்பில் அனுப்புயுள்ளனர். இதனிடையே பள்ளி நிர்வாகம் தரப்பில் கடந்த 6 மாதத்திற்கு முன், தங்களால் பள்ளியை நடத்த முடியாது என பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் கொடுத்தது தெரியவந்துள்ளது. அதற்கு கல்வி அதிகாரிகள், ஒரு பள்ளியை மூட வேண்டும் என்றால் குறைந்தது ஒரு கல்வியாண்டிற்கு முன்பே தெரிவிக்க வேண்டும். அதனால், அந்த பள்ளியை நடப்பாண்டு நடத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்களுக்கும் பெரும் கஷ்டம்

மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட தனியார் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் அந்த ஆசிரியர்களில் சிலர் கூறுகையில், ‘‘இனி எங்களது வாழ்வும் கேள்விக்குறியே. பள்ளியை மூடுவது பற்றி எங்களிடம் எந்த கருத்தும் நிர்வாகம் கேட்கவில்லை. கொரோனாவால் அனைவரும் சிரமத்தில் இருக்கும்போது, எங்களுக்கு பெரும் கஷ்டத்தை கொடுத்துள்ளனர். இனி வேறு பள்ளியில் வேலை தேட வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,’’ என்றனர்.

பள்ளியை மூட அனுமதி இல்லை

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி கூறுகையில், ‘‘பள்ளியை மூடுவதாக திடீரென பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அப்படி ஏதும் தெரிவிக்கக்கூடாது. ஓராண்டிற்கு முன்பே பெற்றோரிடம் தெரிவித்து, முறையாக அனுமதியை பெற்று தான், பள்ளியை மூட முடியும். அதனால், தற்போது அந்த பள்ளியை மூட நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. இதை பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்து விட்டோம். அதனால், பள்ளியை திடீரென மூடிட முடியாது,’’ என்றார்.

Related Stories:

>