கொரோனா ஊரடங்கு எதிரொலி கொய்மலர்கள் சாகுபடியில் ரூ.40 கோடி நஷ்டம்-விவசாயிகள் கவலை

குன்னூர் : கொரோனா 2ம் அலை ஊரடங்கு பாதிப்பால் நீலகிரி மாவட்டத்தில் கொய் மலர் தொழிலில் 40 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அரசு மானியம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் அதிகளவில் கொய்மலர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு முன்பு கொய்மலர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்ததால் சாகுபடி செய்து விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்து வந்தனர்.

தற்போது மாவட்டம் முழுவதும் 80க்கும் மேற்பட்ட விவசாயிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து லில்லியம், ஜெர்பரா உள்ளிட்ட கொய் மலர்கள் சாகுபடி செய்திருந்தனர். இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக கொய் மலர்கள் கொண்டு செல்வதிலும், ஏற்றுமதியிலும் பல்வேறு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அறுவடை செய்யப்பட்ட கொய்மலர்கள் தேக்கமடைந்து வீணாகி வருகிறது.

மேலும் பசுமை குடில்களில் மொட்டுக்களுடன் உள்ள கொய்மலர்களும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு தீர்வு காணாவிட்டால் கொய்மலர் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் உள்ளது.எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி மானியம் மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என கொய் மலர் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: