காசா: காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான் வழிதாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 24 பேர் பலியாயினர். புனித ரம்ஜான் மாதத்தையொட்டி, ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் பொதுமக்கள் கூடுவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பல்வேறு கட்டுப்பாடு விதித்தது. இதனால், இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் நேற்று முன்தினம் நடந்த மோதலில் சுமார் 500 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் அல் அக்சா மசூதியை விட்டு வெளியேற காசா போர்முனையில் போராடும் ஹமாஸ் தீவிரவாதிகள் கெடு விதித்தனர். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் நோக்கி ஜெருசலேம் அருகே ராக்கெட் குண்டு வீசினர்.