கொரோனா தடுப்புக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்புக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேரடியாக முதலமைச்சரிடமோ, அரசு அதிகாரிகளிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும். மின்னணு பரிவர்த்தனை, காசோலை, வங்கி வரைவோலை மூலமாக நன்கொடை வழங்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நன்கொடைகள் அனைத்தும் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைக்க பயன்படுத்தப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெறப்படும் நன்கொடை விவரம் பொதுவெளியில் வெளியிடப்படும். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்யும் நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு அரசு கூடுதல் நிதி செலவிட வேண்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் 1,52,380 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 31,410 பேர் ஆக்சிஜன் உதவியோடு சிகிச்சை பெற்று வருவதாக முதலமைச்சர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு காணாத இந்த சவாலை சமாளிக்கவும் மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்துதல், அனைத்து உயிர்காக்கும் மருந்துகளையும் மக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்தல் ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்துதல், கூடுதல் மருத்துவம் மற்றும் பிற பணியாளர்களை பணியமர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு முனைப்புடன் மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதுபோன்ற பல நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்க பொதுமக்கள் தங்களது கைகளை தமிழக அரசுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

Related Stories: