உடுமலை சந்தை வெறிச்சோடியது: காய்கறிகளை வாங்க ஆளில்லாமல் விவசாயிகள் தவிப்பு

உடுமலை: முழு ஊரடங்கால் உடுமலை சந்தையில் காய்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் தவிப்புக்குள்ளாகினர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி,சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய், கத்தரி, பீட்ரூட், புடலை உள்ளிட்ட காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளையும் காய்கறிகள் உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள கமிஷன் மண்டிகள் உதவியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ் நாடு முழுவதுமுள்ள வியாபாரிகள் மற்றும் கேரள மாநில வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் செல்வர்.

சமீப காலங்களாக காய்கறிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முதல் முழு ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. காய்கறிகள் விற்பனைக்கு மதியம் 12 மணி வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் தக்காளி உள்ளிட்ட தங்கள் விளைபொருட்களை விற்பனைக்காக உடுமலை தினசரி சந்தைக்கு கொண்டு வந்தனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல்,வெளியூர்களுக்கு வாகனங்களை இயக்குவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட காரணங்களால் ஒருசில வெளியூர் வியாபாரிகளே வந்திருந்தனர்.

அத்துடன் அனைத்து பகுதிகளிலும் மளிகை,காய்கறி உள்ளிட்ட சில்லறை விற்பனைக் கடைகளும் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதால் சில்லறை விற்பனையாளர்களும் அதிக அளவில் சந்தைக்கு வரவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் உடுமலை சந்தை ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.எனவே தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்பட்டன. ஆனாலும் வாங்குவதற்கு ஆளில்லாததால் விவசாயிகள் தவித்தனர்.மேலும் அதிக பொருட்செலவு செய்து மீண்டும் ஊருக்கு கொண்டு சென்று அத்தனை காய்கறிகளையும் என்ன செய்வது என்று புலம்பினர்.

இதனால் எவ்வளவு விலை குறைவானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கெஞ்சும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஏற்கனவே விவசாயிகள் நலன் காக்க உழவர் சந்தை உள்ளிட்ட அற்புதமான திட்டங்களைக் கொண்டு வந்த அரசு காய்கறிகள் மொத்த விற்பனையை உறுதிப்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: