இன்று முதல் முழு ஊரடங்கு காய்கறி, இறைச்சி கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஊட்டி : தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இருவார முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்தது. இதனையொட்டி, இன்று காலை ஊட்டியில் காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த மார்ச் 2-வது வாரத்திற்கு பிறகு கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு, நீலகிரியில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை, கடைகள் திறக்க கட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இருந்த போதும் தொற்று கட்டுக்குள் வரவில்லை. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின், 10ம் தேதி துவங்கி 24ம் தேதி அதிகாலை வரை இரு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என கடந்த 8ம் தேதி அறிவித்தார். முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதை முன்னிட்டு ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, நேற்று இரவு வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் காய்கறிகள், இறைச்சிகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் ஊட்டி நகராட்சி மார்க்கெட், ஊட்டி உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகளவில் கூட்டம் ஊட்டியில் குவிந்த நிலையில் ஊட்டி கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலை உள்ளிட்டவற்றில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஊட்டி நகராட்சி மார்க்கெட் வளாகத்தில் காய்கறி, இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், ஊட்டி ேசரிங்கிராஸ் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்க ஏராளமானோர் வந்தனர்.

அங்கு போலீசார் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் தனிமனித இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் நிற்க வைத்தனர். ஏற்கனவே உள்ளே சென்று காய்கறி வாங்கியவர்கள் திரும்பி வந்தவுடன் வரிசையில் நின்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை பின்பற்றிட வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தப்பட்டது.முழு ஊரடங்கில் காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் 12 மணி வரை இயக்க அனுமதியளிக்கப்பட்டு உள்ள நிலையில் கூட்டம் சேருவதை தவிர்க்கும் வகையில் மார்க்கெட் கடைகள் ஏடிசி., காந்தி மைதானம், மத்திய பஸ் நிலையத்திற்கும், உழவர் சந்தை என்சிஎம்எஸ்., பார்க்கிங் தளத்திற்கும் இன்று முதல் தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது.

 இதேபோல், ஊட்டியில் இருந்து கோவை, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளுக்கும், மஞ்சூர், கூடலூர், கோத்தகிரி மற்றும் கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் ஏராளமான பொதுமக்கள் பயணித்தனர். மேலும், இரு வார முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் முழுமையாக மூடப்படும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. மதுப்பிரியர்கள் பெட்டி ெபட்டியாக  மது வாங்கி சென்றனர்.

Related Stories: