புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா: சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி,:  புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடந்த 2 நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்றின் 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் நாட்டிலேயே தொற்று அதிகம் பரவும் மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கடந்த ஏப்.23ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது. தற்போது மேலும் பல கட்டுப்பாடுகளை விதித்து, வரும் 24ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுவையில் நடைபெற்று முடிந்த தேர்தலில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதைத் தொடர்ந்த, கடந்த 7ம் தேதி ரங்கசாமி முதல்வராக பதவியேற்று கொண்டார். அவருக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

முன்னதாக கடந்த 5ம் தேதி சேலம் சூரமங்கலத்தில் உள்ள அப்பா பைத்தியம் சாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு புதுவை திரும்பினார். அப்போது, ரங்கசாமிக்கு சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. அன்றைய தினமே, இது வதந்தி என்றும், ரங்கசாமி உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாகவும் என்ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால் தெரிவித்தார். மேலும், கடந்த 7ம் தேதி கவர்னர் மாளிகையில் நடந்த முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களும் கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்று சான்றிதழுடன் வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பேரில் 183 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ரங்கசாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த என்ஆர் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் உட்பட 2 பேருக்கும், 9 போலீசாருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

இதற்கிடையே முதல்வராக ரங்கசாமி பதவியேற்றவுடன் சட்டசபைக்கு சென்று புதிதாக 10 பேருக்கு முதியோர் பென்ஷன், 2 மாத அரிசிக்கான பணம், கல்லூரி மாணவர்களுக்கான சென்டாக் நிதியுதவி, முதியோர் பென்ஷன் ரூ.500 உயர்த்தி கொடுப்பது போன்ற கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்து, தனது பணிகளை தொடங்கினார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதுடன் காய்ச்சலும் அதிகமாக இருந்தது. இதையடுத்து, அவர் நேற்று ரேபிட் கிட் மூலம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில் பாசிடிவ் என்று முடிவு வந்தது. தொடர்ந்து, ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று மாலை வெளியானது. அதிலும் தொற்று இருப்பது உறுதியானது.

அதன் பிறகு, அவரது நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அப்போது, காய்ச்சல் அதிகமாக இருந்ததையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். புதுச்சேரி முதல்வராக பதவியேற்ற 3வது நாளிலேயே ரங்கசாமி தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் என்ஆர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: