ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா: நெல்லளவு கண்டருள்கிறார் நம்பெருமாள்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி இன்று மாலை நம்பெருமாள் நெல்லளவு கண்டருள்கிறார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, மாலை நம்பெருமாள் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது. கொரோனா காரணமாக பக்தர்களின்றி 2ம் ஆண்டாக விழா நடைபெறுகிறது. 7ம் நாள் விழாவான இன்று மாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நாளை (8ம் தேதி) காலை வெள்ளி குதிரை வாகனம், மாலை தங்க குதிரை வாகனத்தில் கருடமண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 9ம் தேதி சித்திரை தேரோட்டம் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் நம்பெருமாள் அன்று காலை 6.30 மணிக்கு கருடமண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். 10ம் தேதி சப்தாவரணம் நடைபெறும். 11ம் தேதி ஆளும் பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

Related Stories: