பார்வை பெற்ற பர்த்திமேயு

(மாற்கு 10:46-52)

இந்த நிகழ்ச்சி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. மாற்கு நற்செய்தி நூல் பத்தாம் அதிகாரம் இயேசு கிறிஸ்துவின் பல முக்கிய சமூக மாற்று சிந்தனைகளைத் தாங்கி வருகிறது. இதில் மணவிலக்கு, சிறுபிள்ளைகள், செல்வத்தின் தீமை, இயேசு கிறிஸ்துவின் சாவு பற்றிய முன்னறிவிப்பு, தொண்டு செய்யும் மானிடமகன் மற்றும் பார்வை பெற்ற பர்த்திமேயு ஆகியவை இடம் பெற்றுள்ளது.

இயேசு கிறிஸ்து எரிகோவை விட்டு எருசலேம் நோக்கிச் செல்லும் பாதையில் அடியெடுத்து வைக்கையில், திமேயு என்பவர் மகன் பர்த்திமேயு, வழியோரமாக அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவ்வழியில் போவது நாசரேத்தூர் இயேசு என்பதை விசாரித்து அறிந்து அவர் அருகில் வந்ததும் ‘‘இயேசுவே, தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என்று கத்தத் தொடங்கினார். அங்கிருந்தவர்கள் பேசாதிருக்குமாறு அவரை அதட்டினார்கள். ஆனால் அவரோ ‘‘தாவீதின் மகனே எனக்கு இரங்கும்” என்று மேலும் உரக்கக் கத்தினார்.

இயேசு நின்று அவரைக் கூப்பிடுங்கள் என்றார். அவரை அதட்டியவர்கள் அவரிடம் சென்று ‘‘துணிவுடன் வாரும் இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்” என்றார்கள். இதைக் கேட்டதும் பர்த்திமேயு மேலுடையைத் தூக்கி எறிந்து விட்டு குதித்தெழுந்து இயேசுவினிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து ‘‘உமக்கு நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார். இயேசு கிறிஸ்துவின் சிறப்பு இது தான். ஒரு பயனாளியின் தேவையை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் அவருக்கு உதவ வருபவரல்ல எனும் புரட்சிகரச் சிந்தனையை மீண்டும் ஒரு முறை இங்கு நடைமுறைப்படுத்தினார். இயேசு இவ்வாறு கேட்டதும்.

பர்த்திமேயு ‘‘ரபூனி நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்” என்றார். இயேசு ‘‘நீர்போகலாம் உம் நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று” என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார். மாற்கு நற்செய்தி நூலாசிரியர் பதிவு செய்துள்ள நிகழ்வுகளில் இது முக்கியமான ஒன்று. இந்த நிகழ்ச்சியில் இயேசு நலமளிக்கும் ஆற்றலுடன் நலமடைந்தவரின் நம்பிக்கையையும் பாராட்டுவது கவனிக்கத் தக்கது. இதில் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பல இருப்பினும் ஒரு சிலவற்றை இங்கே காண்போம்.

1) பார்வையற்றவர் இயேசுவின் காலத்தில் சமயரீதியாக ஒடுக்கப்பட்டவர். அவர்கள் ஆலயத்தில் நுழையத் தடை இருந்தது. பர்த்திமேயுவுக்கு சமய ஒடுக்குதலோடு சமூக ஒடுக்குதலும் பொருளாதார ஒடுக்குதலும் இருந்தது. இந்த ஒடுக்குதல்களை எதிர்த்து அவர் குரலெழுப்பினார். அடக்கு முறைக்கு அடங்காமல் உரிமைக் குரலெழுப்பி நலம் பெற்றார். இன்று ஒடுக்கப்பட்டவர்கள் அவர்களை ஒடுக்குவோர்க்கு அடங்கி நடந்தால் விடுதலை பெற முடியாது. அவர்களுக்கு அவர்கள் தான் குரலெழுப்ப வேண்டும்.

2) பெரும் கூட்டத்தில் நடந்து செல்லும் இயேசு விளிம்புநிலை மனிதன் எழுப்பும் குரலைக் கேட்டு அவரைத் தன் அருகே அழைத்து அவருக்குப் பார்வை வழங்கினார். அவர் விடுதலைக்குத் தடையாக இருப்பவர்களையே தம் தொடர்பாளராக மாற்றினார். மேலும், இயேசு உமக்கு என்ன வேண்டும் என்று பர்த்திமேயுவிடம் கேட்டு அவர் விருப்பத்தைக் அவர் வாயால் சொல்ல வைத்து அதை நிறைவேற்றினார்.

3) பர்த்திமேயுவுக்குக் கிடைத்தது பார்வை மட்டுமல்ல கண்ணோக்கும் சேர்த்து தான். இப்போது பர்த்திமேயு உலகைப் பார்க்க மனிதர்களைப் புரிந்துகொள்ள பிறர் சார்பு தேவையில்லை. அவரே பார்த்து அறிந்து ஆய்வு செய்து முடிவெடுக்கும் ஆற்றலை இயேசுவின் வழி பெறுகிறார். ஒடுக்கப்பட்ட யாவருக்கும் ஒரு முன்னோடியாகவும் விளங்குகிறார்.

4) பார்வை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்ட பர்த்திமேயுவுக்குப் புதிய பாதை கண்ணில் படுகிறது. அதுதான் சிலுவைப் பாதை. இயேசுவின் பாதை. இப்போது அவர் தன் ஊர் உறவுகள் அனைத்தையும் உதறித் தள்ளி இயேசுவின் சீடராகி அவரைப் பின் தொடர்ந்தார். இழப்பதற்கு ஏதுமில்லாதவர்களே அதிகமாக இயேசுவைப் பின் தொடர்கின்றனர்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

The post பார்வை பெற்ற பர்த்திமேயு appeared first on Dinakaran.

Related Stories: