பிரேசிலில் உருமாறிய கொரோனா வைரசையும் தடுக்கும் கோவாக்சின்: ஆய்வில் தகவல்

ஐதராபாத்: பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போது  கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்து வருகின்றது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி  வேகமாக பரவி வரும் இங்கிலாந்தின் இரட்டை மரபணு மாறிய கொரோனா வைரசுக்கு எதிராக நல்ல பலன் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இதேபோல் கோவிஷீல்டு தடுப்பூசியூம் இரட்டை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களுக்கு எதிராக செயல்படுவதாக தெரிவித்தனர்.இந்நிலையில் பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. புனேவில் உள்ள தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் புதுடெல்லியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள், பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கோவாக்சினின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களிடம் ஆய்வு செய்தனர்.

இதில் கோவாக்சின் இரண்டு டோஸ் செலுத்திக்கொண்டவர்களிடம் பிரேசிலின் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இரண்டு டோஸ் கோவாக்சின் மருந்தானது ஆன்டிபாடிகளை உயர்த்துவதாகவும், இரண்டு வகையான தொற்றுக்கும் எதிராக சிறப்பாக செயலாற்றுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சில தடுப்பூசிகள் இங்கிலாந்தின் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்புரிந்தாலும், தென்னாப்பிரிக்க உருமாறிய வைரசுக்கு எதிரான செயல்திறன் குறைவாகவே உள்ளது என்பதும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: