புதுச்சேரி சட்டசபை தேர்தல் இன்று வாக்கு எண்ணிக்கை: முன்னணி நிலவரம் முற்பகல் 11 மணிக்கு தெரியும்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் மொத்தமுள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குபதிவு ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற்றது. காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஓரணியாகவும், எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு அணியாகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதுதவிர மநீம, நாம் தமிழர், அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகளும் போட்டியிட்டன. மொத்தம் 324 வேட்பாளர்கள் தேர்தலை களத்தில் உள்ளனர். 81.70% வாக்குகள் பதிவாகி இருந்தன.

பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று  காலை 8 மணிக்கு தொடங்குகிறது. புதுச்சேரியில் 23 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி, மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக், தாகூர் அரசு கலைக்கல்லூரி ஆகியவற்றில் நடைபெறுகிறது. காரைக்காலில் 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அறிஞர் அண்ணா கல்லூரியிலும், மாகேயில் ஜவஹர்லால் நேரு அரசு மேனிலைப்பள்ளியிலும், ஏனாமில் சிவில் மையத்திலும் வாக்குகள் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதன்பின் வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு காலை 8.30 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி தொடங்குகிறது. அதன்பின் சுற்று வாரியாக வாக்குகள் எண்ணப்பட்டு விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்த்த பிறகு அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. காலை 11 மணி முதல் முன்னணி நிலவரம் தெரியவரும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மேைஜகளின் எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 8 தொகுதிகளின் வாக்குகள் எண்ணப்படுகிறது. இவை முடிந்தவுடன் அடுத்ததாக 8 தொகுதிகளுக்கும், பிறகு 7 தொகுதிகளுக்கும் 3 கட்டமாக பிரித்து எண்ணப்படுகிறது. இதனால், இறுதி முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகலாம் என தெரிகிறது.

Related Stories: