சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியில் வார்னருக்கு பதில் கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமனம்..! சன் ரைஸர்ஸ் நிர்வாகம் அறிவிப்பு..!

அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பதவியில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பல அதிரடி வீரர்களை கொண்டுள்ள ஐதராபாத் அணி, ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்றுள்ளது.

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வார்னரின் ஆமைவேக விளையாட்டே தோல்விக்கு காரணம் என்றும், அவருக்கு பதில் கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் பொறுப்பை கொடுக்கலாம் என்று முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக நியூஸிலாந்து அணியில் அதிரடி கேப்டனான கேன் வில்லியம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். வில்லியம்சன், நாளை ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி முதல் கேப்டனாக பதவியேற்கவுள்ளார்.

இதனை ஐதராபாத் அணி, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. டேவிட் வார்னர் மீது மிகுந்த மரியாதையை உள்ளதாகவும் அவர் வரும் போட்டிகளில் அணிக்கு உறுதுணையாக இருப்பார் என்றும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான நாளைய ஆட்டத்தில்  புதிய வெளிநாட்டு வீரர்கள் தேர்வு  இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: