மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கழிவு நீரை ஏரியில் கொட்டும் தனியார் லாரிகள்: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

புழல்: சென்னை மாதவரம், கொளத்தூர், லட்சுமிபுரம், ரெட்டேரி, விநாயகபுரம், புத்தகரம், சூரப்பட்டு, புழல், காவாங்கரை, மற்றும் புறநகர் பகுதிகளான செங்குன்றம், வடகரை, வடபெரும்பாக்கம், பாடியநல்லூர், நல்லூர், அலமாதி,  பம்மதுகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. இவ்வீடுகளின் கழிவுநீரை  தனியார் நிறுவன லாரிகள் அதிக கட்டணம் பெற்றுக்கொண்டு எடுக்கின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் கழிவுநீரை பாடியநல்லூர் ஏரி மற்றும் மேம்பாலம், சென்னை கொல்கத்தா - தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் கொண்டு கொட்டுகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, பாடியநல்லூர் ஏரி மாசடைந்து வருகிறது.

மேலும்,  இச்சாலைகள்  வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்  மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்கு போலீஸ் சோதனை சாவடி இருந்தும் அவர்கள் கண்டும் காணாமல் உள்ளனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கு பலமுறை அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தபோது,  கண்துடைப்புக்காக வந்து ஒரு சில நேரங்களில்  கழிவு நீர் கொண்டு வந்து ஊற்றும்  வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கின்றனர்.  எனவே,  இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக கழிவு நீரை கொண்டு வந்து ஏரியில் கலக்கவிடும் லாரிகளை பறிமுதல் செய்வதோடு, டிரைவர்களுக்கு மிகப்பெரிய அளவில்  அபராதம் விதிக்க வேண்டும்  பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: