ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க எதிர்ப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை: தூத்துக்குடியில் பரபரப்பு- போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு மற்றும் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு தூத்துக்குடி அருகே உள்ள பண்டாரம்பட்டி, புதுத்தெரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக, பண்டாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர்,  ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தி, அருணாதேவி, ஹரிராகவன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாரிச்செல்வம் உள்ளிட்டோர் திரண்டு வந்து கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இதையொட்டி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார், போராட்டக் குழுவினரை தடுத்து நிறுத்தி கூட்டமாக மனு அளிக்க செல்ல வேண்டாம். நோய் தொற்று இருப்பதால் தனித்தனி குழுக்களாக சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர்.  அதன்பேரில் கலெக்டர் செந்தில்ராஜை சந்தித்து அவர்கள் அளித்த மனுக்களில் கூறியிருப்பதாவது: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது. சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக்கூட்டம், முறையாக அனைத்துக் கட்சிகளையும் அழைத்து நடத்தப்படவில்லை. எனவே அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. மறு பரிசீலனை செய்யவேண்டும். மீண்டும் அனைத்துக் கட்சியினரையும் அழைத்து கூட்டம் நடத்தி கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் முற்றுகையால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதுதவிர, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை பகுதியில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கலவரத்தடுப்பு வாகனங்கள், அதிவிரைவு படையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

59 பேர் மீது வழக்கு

முன்னதாக, ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரம்பட்டி மைதானத்தில் தர்ணா நடத்தினர். இதையடுத்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் வசந்தி, அருணாதேவி உள்ளிட்ட 59 பேர் இந்திய தண்டனை சட்டம் 143, 269, 270 மற்றும் தொற்று நோய் பரவல் தடைச்சட்டம் 3வது பிரிவு ஆகிய 4 பிரிவுகளின்கீழ் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏப்.30ல் உண்ணாவிரதம்

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலை திறப்பதை கண்டித்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் வரும் 30ம் தேதி தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் எதிரே ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்ட

மிடப்பட்டுள்ளது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Related Stories: