விம்பிள்டனுக்கு குறி வைக்கிறார் பெடரர்... பேட்ரிக் மெக்கன்ரோ கணிப்பு

சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர், கடந்த ஆண்டு முழங்கால் மூட்டு காயத்துக்காக 2 அறுவைசிகிச்சைகள் செய்து கொண்டதால் நீண்ட ஓய்வில் இருந்து வந்தார். சமீபத்தில் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் களமிறங்கிய அவர், அடுத்த மாதம் நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் தொடரில் அவர் கடந்த 5 ஆண்டுகளில் 4 முறை பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது. இந்த வகை மைதானத்தில் அவரது ஆட்டம் அவ்வளவாக எடுபடாது என்பது தெரிந்தும், இம்முறை ரோலண்ட் கேரோசில் களமிறங்க பெடரர் முன்வந்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க முன்னாள் நட்சத்திர வீரர் பேட்ரிக் மெக்கன்ரோ கூறுகையில், ‘நன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை இல்லாவிட்டால் எந்த போட்டியிலுமே பெடரர் களமிறங்க மாட்டார். உடல்தகுதியிலும் 100% திருப்தி இருந்தால் மட்டுமே அவர் விளையாடுவார். பிரெஞ்ச் ஓபனில் விளையாடுவது பட்டம் வெல்வதற்காக அல்ல. அடுத்து வரும் விம்பிள்டன் தொடரில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என்று நினைக்கிறேன். தனக்கு மிகவும் விருப்பமான, ராசியான புல்தரை மைதானத்தில் நடக்கும் விம்பிள்டன் போட்டிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பது தெரிந்தது தான்’ என்று கூறியுள்ளார். விம்பிள்டனில் பெடரர் 8 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Related Stories: