பெண்காவலர்களுக்கு பாலியல் தொந்தரவு பாளையங்கோட்டை சிறைக்குள் கஞ்சா, மது, பீடி விற்பனை கனஜோர்: கொள்ளையடிக்கும் அதிகாரிகளால் சீர்கெட்டு கிடக்கும் சிறை நிர்வாகம்

சென்னை: பாளையங்கோட்டை சிறைக்குள் கஞ்சா, மது ஆகியவை சிறை அதிகாரிகள் உடந்தையுடன் கடத்தப்படுவதாகவும், கைதிகளுக்கு வழங்கப்படும் திட்டத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாகவும், அதிகாரிகளே சிறைக்குள் சாதி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பாளையங்கோட்டை மத்திய சிறைக்குள் முத்து மனோ என்ற வாலிபர், படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தக் கொலை, மத்திய சிறையில் உள்ள அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்துள்ளதாக கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கொலை நடந்த இடத்தில் இருந்த மற்றும் கொலைக்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மற்றும் வார்டன்கள் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, பாளையங்கோட்டை சிறைக்குள் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், கஞ்சா ஊள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்கள் நடமாட்டம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து சிறைத்துறை வார்டன்கள் கூறியதாவது: பாளையங்கோட்டை சிறைக் கண்காணிப்பாளராக கிருஷ்ணகுமார், பொறுப்பேற்ற பிறகு பெண் காவலர்களுக்கும், அலுவலகத்தில் பணி செய்யும் பெண்களுக்கும், சிறைப் பள்ளி ஆசிரியருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு எதிராக சிறையில் பாலியல் தொல்லைகள் பெருகி வருகிறது. சமீபத்தில் பெண் அலுவலர், 3 காவலர்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானார்கள். இது குறித்து மகளிர் ஆணையத்தில் புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை. மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பும்போது மதுரை சரக டிஐஜி பழனி, பாளை சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், சிறை அதிகாரி பரசுராமன், விஜிலன்ஸ் எஸ்.ஐ.ஹரி, ஏட்டு விஜயராகவன் ஆகியோர் பாதிக்கப்பட்ட நபர்களை தனித்தனியாக அழைத்து பிரச்னை ஒன்றும் இல்லை என்று எழுதிக் கொடுங்கள் என்று மிரட்டுகின்றனர்.

எழுதிக் கொடுக்காவிட்டால், நடத்தை சரியில்லாதவர் என்று அவமானப்படுத்தி விடுவோம் என்று கூறியதால் எழுதிக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதை வெளியில் சொல்ல முடியாமல் பெண்கள் தவிக்கின்றனர். பாளை சிறையில் ஆயிரம் கைதிகள் உள்ளனர். வெளியில் இருந்து பீடி கட்டுகள் சர்வ சாதாரணமாக அதிகாரிகள் துணையுடன் கடத்தி வரப்படுகிறது. ஒவ்வொரு கைதிக்கும் கட்டாயமாக பீடி வழங்கப்படுகிறது. ஒரு கைதிக்கு ஒரு நாளைக்கு 18 பீடி கட்டுகள் வழங்குகின்றனர். இதனால் ஒரு மாதத்துக்கு 144 கட்டுகள் வரை அவன் குடிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. குடிக்காதவனுக்கும் வழங்கப்படுகிறது. இதனால், அவன் குடிகாரனாக மாறி விடுகிறான்.

இதற்காக கைதிகளிடம் இருந்து பணத்தை கறந்து விடுகின்றனர். இது சிறைத்துறை அதிகாரிகளுக்கு பெரிய லாபம் கொழிக்கும் தொழிலாகவே மாறிவிடுகிறது. கைதிகள் தங்களது உறவினர்களிடம் பேச டெலிபோன் பூத் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒருபோன்தான் வேலை செய்கிறது. மற்ற போன் வேலை செய்யவில்லை. கைதிகள் யாராவது இது குறித்து கேட்டால், கேட்டவனைப் பிடித்து 5வது பிளாக்குல போடு என்கிறார் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார். இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிளாக். இதுக்குப் பயந்து யாரும் கேள்வி கேட்பதில்லை.

சிறையில் வேகாத சாப்பாடு வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வேகாத சிக்கன் போடுகின்றனர். குடிநீர் உப்பாக தான் இருக்கிறது. இதை எல்லாம் அவர்கள் கேட்பது இல்லை. சில முக்கியமான கைதிகளுக்கு மது வழங்கப்படுகிறது. கஞ்சா போன்ற போதைப் பொருள்களும் தாராளமாக கிடைக்கிறது. பாளை சிறைக்குள் ஆயுதங்களும் உள்ளன. முக்கியமான கைதிகளிடம் செல்போன்களும் உள்ளன. வெளியில் என்ன நடந்தாலும், பாளை சிறைக்குள் இருப்பவர்களுக்கு எளிதாக தெரிந்து விடும். இதனால்தான் முத்து மனோ என்ற கைதி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சிறையில் பணியாற்றும் அதிகாரிகள் சில மாதங்களிலேயே லட்சாதிபதியாகிவிடுகின்றனர்.

இதனால் அவர்கள் இங்கு சொகுசாக வாழ்வதையே விரும்புகின்றனர். சிறைக்குள் அதிகாரிகளும் சாதி ரீதியாக பிரிந்து உள்ளனர். தங்கள் சாதி கைதிகளிடம் நெருக்கமாகவும் உள்ளனர். இதனால் சிறைக்குள் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை பணியாற்ற அனுமதிக்காமல், வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை பணியில் அமர்த்த வேண்டும். மேலும், பாளை சிறைக்குள் உயர் அதிகாரிகள் பெரிய அளவில் சோதனை நடத்தினால், ஆயுதங்களும் தடை செய்யப்பட்ட பொருட்களும் கிடைக்கும். முறைகேடுகளை செய்யும் மற்றும் உடந்தையாக இருக்கும் பாளை சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிறை காவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories: