வேலூர்- திருவண்ணாமலை சாலையோரம் புதர்மண்டி பார்வைக்கு தெரியாத ஆபத்தான கிணறு

*பாதுகாப்பு சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை

கண்ணமங்கலம் : வேலூர்- திருவண்ணாமலை சாலையோரம் பார்வைக்கு தெரியாமல் புதர் மண்டி ஆபத்தான நிலையில் உள்ள கிணற்றிற்கு பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ேவலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம், முனியந்தாங்கல், கேளூர் இடையே சாலையின் மிக அருகில் புதர்கள் மண்டி ஆபத்தான நிலையில் சாலையோர கிணறு ஒன்று உள்ளது.

சாதாரணமாக பார்க்கும் போது அங்கு கிணறு இருப்பதற்கான எவ்வித அடையாளமும் தெரியாது. வாகனங்கள் முந்தி செல்லும் போது வழிவிட இந்த இடத்தில் ஒதுங்கினால் கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. யாரும் பார்க்காத போது வாகனங்கள் விழுந்துவிட்டால், கிணற்றில் வாகனங்கள் விழுந்து விட்டது என்பதற்கான எந்தவித அடையாளமும் தெரிவதில்லை. மேலும், இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பி புதர்கள் மண்டி காணப்படுகிறது. ஏற்கனவே இந்த கிணற்றில் இரண்டு முறை வாகனங்கள் விழுந்து விபத்துக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இவ்வளவு ஆபத்தான நிலையில் சாலையின் விளிம்பில் உள்ள கிணற்றிற்கு எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ேவதனை அளிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, அடுத்த விபத்து ஏற்படும் முன்,  இனியும் தாமதம் செய்யாமல் போர்க்கால அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கிணற்றுக்கு பாதுகாப்பு சுவர் மற்றும் எச்சரிக்கை பலகை  அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: