சித்ரா பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் இல்லாமல் வெள்ளியங்கிரி மலை வெறிச்சோடியது

தொண்டாமுத்தூர் :  சித்ரா பவுர்ணமி தினமான நேற்று வெள்ளியங்கிரி மலை பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் ஒன்றாகும்.கடல் மட்டத்தில் இருந்து 6000 அடி உயரத்தில் ஆறு மலைகள் கடந்து ஏழாவது மலையில் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கிரிவலம் வருவது வழக்கம்.

பூண்டி மலையடிவாரத்திலிருந்து தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி சென்றடைய முதல் மலை உச்சியில் இருக்கும் வெள்ளை விநாயகர் இரண்டாவது மலை பகுதியில் இருக்கும் கைதட்டி சுனை பாம்பாட்டி சித்தர் குகை மூன்றாவது மலையில் இருக்கும் வழுக்குப்பாறை, வாய் சோலை, ஒட்டர் சமாதி, ஆகியவற்றை கடந்து 5, 6 ஆகிய செங்குத்தான மலைகளை கடந்தால் விபூதி மலை ஆண்டி சுனை ஆகியவற்றில் பக்தர்கள் இளைப்பாறி ஏழாவது மலையில் பஞ்சலிங்க பூத சுயம்புலிங்கமாக இருக்கும் வெள்ளியங்கிரி தரிசிக்க சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தன்று ஒரு லட்சம் பக்தர்கள் குவிவது வழக்கம்.

ஒவ்வொரு முறையும் சித்ரா பவுர்ணமி தினத்தில் காந்திபுரம், உக்கடம் ஆகியவற்றிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் பூண்டிக்கு இயக்கப்பட்டு வந்தன. கொரோனா இரண்டாவது அலை  வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதனால், வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாசி மாதத்தில் துவங்கிய வெள்ளியங்கிரி கிரிவல புனித யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழு மலைகளை ஏறி சாமி தரிசனம் செய்து திரும்பினர். இந்நிலையில், திடீரென அறிவிக்கப்பட்ட பொது முடக்கம்   காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் பக்தர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

சித்ரா பௌர்ணமி தினத்தில் போடி மலையடிவாரத்தில் விற்பனை செய்யப்படும் மூங்கில் குச்சி உதவியுடன் விடிய விடிய பக்தர்கள் ஏழுமலை நோக்கி யாத்திரை மேற்கொள்ளுவதோடு மலை உச்சியில் அமைந்திருக்கும் வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசித்து மகிழ்வர்.

சித்ரா பௌர்ணமி தினமான நேற்று பொது முடக்கம் காரணமாக பக்தர்கள் வருகை இன்றி வெள்ளிங்கிரி மலை வெறிச்சோடியது. இருப்பினும், மலையடிவாரத்தில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சமேத மனோன்மணி தாயாருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். சித்தரகுப்த வழிபாடும் நடந்தது.

இதேபோல், மலை உச்சியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் இருக்கும் சித்ரா பௌர்ணமி தினமான நேற்று மாலை முதல் விடிய விடிய சித்தர்கள் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் இன்றி அர்ச்சகர்கள் மட்டுமே பூஜை செய்தது இதுவே முதல் முறையாகும்.

கோடை மழை பெய்தாலும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று பக்தர்களின் வருகைக்கு குறைவில்லாத நிலையில் கொரோனா தொற்று காரணமாக, இந்த முறை பூண்டி மலையடிவாரம் வெறிச்சோடியது.இருப்பினும், பக்தர்கள் யாராவது அத்துமீறி மாற்று வழியில் மலை ஏறுகின்றனரா? என்பதை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

ஆதிவாசி மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

வெள்ளியங்கிரி மலையில் புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்காக ஆதிவாசி மக்கள் பலர் சிறு சிறு குடிசைகள் அமைத்து குடிநீர், சோடா, குளிர்பானங்கள், மாங்காய், காட்டு நெல்லிக்காய், எலுமிச்சை பழம் வில்வ காய் மற்றும் மூலிகைகள் அரிய வகை வேர்கள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வது வழக்கம். இம்முறை பக்தர்கள் வருகை இல்லாத காரணத்தினால் கடைகள் எதுவும் அமைக்கப்படவில்லை. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆதிவாசி மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

ஆண்டுதோறும் மார்ச் ஏப்ரல், மே மாதங்களில் கிரிமலை ஏறி வரும் பக்தர்களுக்காக சுக்கு காபி, வாழைக்காய் பஜ்ஜி உள்ளிட்டவற்றை சமைத்து பக்தர்களிடம் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்ந்து வந்த ஆதிவாசி மக்கள் இம்முறை வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வதன் மூலம் ஆதிவாசி மக்களுக்கு ஓராண்டுக்கு தேவையான அளவிற்கு வருமானம் இருந்து வந்த நிலையில் வழிபாட்டுத் தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கின்றனர்.

Related Stories: