திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகளில் கிருமி நாசினி தெளிப்பு-தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கடந்த சில நாட்களாக வேகமாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவித்தது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறியது.  அதன் காரணமாக ‌ திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை,  வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும்  ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அதன் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டும், பிரதான சாலைகளில் பேருந்துகள், ஆட்டோக்கள், லாரிகள் என எதுவும் ஓடாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், தமிழக அரசு உத்தரவை பரிசீலிக்கும் பொருட்டு தமிழக போக்குவரத்து துறை இரவு 8 மணி முதல் காலை 4 மணி வரை பேருந்துகள் இயங்காது என்று அறிவித்திருந்தது. மேலும், நேற்று முழு ஊரடங்கு காரணமாக திருப்பத்தூரில் பேருந்து நிலையம் முழுவதும் ஆள் நடமாட்டம் இன்றி  வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும் திருப்பத்தூர் பகுதியில் முக்கிய சாலைகள், வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கு காரணமாக நகரப்பகுதி மற்றும் சுற்றுப்பகுதிகளில் போலீசார் ஆங்காங்கே தடுப்பு வேலி அமைத்து, கண்காணித்து வந்தனர். தொடர்ந்து சாலைகளில் சுற்றித்திரிந்தவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் ஓட்டல் திறக்கப்பட்டு சமூக இடைவெளி விட்டு பார்சல் மட்டும் விற்பனை செய்தனர். திருப்பத்தூர் நகராட்சி சார்பில் அனைத்து தெருக்கள் மற்றும் பஸ் நிலையம் பிரதான சாலைகளில் இயந்திரங்களை கொண்டு கிருமிநாசினி நகர் முழுவதும் தெளிக்கப்பட்டது.

தங்கு தடையின்றி கிடைத்த மதுபானங்கள்:

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முகூர்த்த நாளையொட்டி பல்வேறு பகுதிகளில் உள்ள வீடு கிரகபிரவேசம் மற்றும் திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றது. அதில் 50 பேர் மட்டுமே பங்கேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து திருமணத்தில் கலந்து கொண்டனர். இதன்காரணமாக  திருமண மண்டபங்களில் கூட்டம் இல்லாமல் இருந்தது.

மேலும், திருப்பத்தூர் பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து போலீசார் ஒத்துழைப்போடு புதுப்பேட்டை ரோடு, பொன்னியம்மன் கோயில் தெரு, கவுதம பேட்டை, மோஸ்கோ நகர், சிவராஜ் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கு தடையின்றி அதிக விலைக்கு விற்கப்பட்டது.

Related Stories: