பவானிசாகர் கீழ்பவானி வாய்க்காலில் உலோகத்தினாலான கிருஷ்ணர் சிலை கண்டெடுப்பு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்காலில் உலோகத்தினாலான கிருஷ்ணர் சிலை கண்டெடுக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூர் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் உள்ள படித்துறையில் பெண்கள் துணி துவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, வாய்க்கால் தண்ணீருக்குள் சிலை இருந்ததை கண்டனர். இது குறித்து உடனடியாக அப்பகுதியில் உள்ள வருவாய் துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையறிந்த அக்கரை தத்தப்பள்ளி விஏஓ சிலம்பரசன், கிராம உதவியாளர் சக்திவேல் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரில் மூழ்கியிருந்த சிலையை எடுத்து பார்த்தனர். அப்போது, அது சுமார் ஒன்றரை அடி முதல் 2 அடி உயரமுள்ள உலோகத்திலான கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக அந்த சிலையை சத்தியமங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வந்து தாசில்தார் ரவிசங்கரிடம் ஒப்படைத்தனர். சிலையின் எடை 4 கிலோ 600 கிராம் என்றும், இந்த சிலை சாதாரண வகை உலோகத்தில் செய்து வெள்ளி முலாம் பூசப்பட்டு இருக்கலாம் எனவும், சிலையின் மதிப்பு ரூ.20 ஆயிரம் இருக்குமெனவும் வருவாய் துறையினர் கூறினர். இது புராதன காலத்து சிலையா? அல்லது வீட்டில் வைத்து பூஜிக்கும் சிலையா? என்பது குறித்து மாவட்ட தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories: