கடந்த ஆண்டை காட்டிலும் மிகப்பெரிய சவால் கிராமங்களில் பரவ விடாதீர்கள்: பஞ்சாயத்து அமைப்புகளுக்கு பிரதமர் வேண்டுகோள்

புதுடெல்லி: கொரோனா சவாலானது கடந்த ஆண்டை காட்டிலும் கடுமையாக இருப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். தேசிய பஞ்சாயத்து  தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது இதனையொட்டி நடந்த விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக  பிரதமர் மோடி  கலந்து கொண்டார். இதில் எட்டு மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் விழாவில் இணைந்திருந்தனர். தொடர்ந்து சுவாமித்வா திட்டத்தின் கீழ் சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகளின் விநியோகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் பேசிய பிரதமர் மோடி,  கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் யாராவது முதலில் வெற்றி பெற போகிறார்கள் என்றால், அது இந்தியாவின் கிராமங்களாக தான் இருக்கப்போகிறது. இந்த கிராமங்களின் தலைமை, கிராம மக்கள் நாட்டுக்கும் உலகத்துக்கும் வழிகாட்டுவார்கள். கடந்த ஆண்டு கிராமப்புறங்களில் கொரோனா நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. இது உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைகளின் வெற்றியை பிரதிபலிக்கிறது.

இப்போது அவர்களுக்கு அனுபவமும் அறிவும் இருக்கின்றது. கொரோனா நோய் தொற்று கிராமங்களில் பரவாமல் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பு மருந்து மற்றும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே கிராமங்களின் மந்திரமாக இருக்க வேண்டும். கிராமங்கள் அரசின் வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். கிராம மக்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி பேச வேண்டும். ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான் மே, ஜூன் மாதங்களில் இலவச ரேசன் பொருட்கள் வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் 80 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு ₹ 26,000 கோடி செலவாகும். இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டார்.

மேலும் விழாவில் 4.09 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு அவர்களது சொத்துக்களுக்கான மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து தேசிய பஞ்சாயத்து தினத்தையொட்டி தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2021ஐயும் பிரதமர் மோடி அறிவித்தார். இதனுடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை பரிசு பணம் மானிய உதவியாக வழங்கப்படும். இந்த பரிசுத்தொகையானது பஞ்சாயத்துக்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக நேரடியாக பரிவர்த்தனை செய்யப்படும்.

Related Stories: