பேருந்து நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்தால் நடவடிக்கை: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட தலைமை பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் பாண்டிச்சேரி, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. திருவள்ளூர் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள பஸ் நிலையத்தில் போதுமான இட வசதி இல்லாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து புதிய பஸ் நிலையம் அமைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஊத்துக்கோட்டை செல்லும் சாலையில் பூண்டி ஊராட்சி ஒன்றியம், சிறுவானூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடங்கிநல்லூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் பஸ் நிலையம் அமைக்க கடந்த  5 ஆண்டுகளுக்கு முன் நிலம் ஒதுக்கப்பட்டது.

தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீட்டுமனைகளாக விற்பனை செய்வதாக தெரிகிறது.இந்த நிலையில், பஸ் நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை ஆக்கிரமித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவின்படி, திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மேற்பார்வையில், வருவாய் ஆய்வாளர்கள் பாண்டூர் கௌதமன், திருவள்ளூர் பெருமாள், சிறுவானூர் கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி ஆகியோர் புல்லரம்பாக்கம் எஸ்ஐ ராமமூர்த்தி ஆகியோருடன் சென்று அறிவிப்பு பலகை அமைத்தனர். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: