ராமநாதபுரம் ஜிஹெச்சில் கொரோனா வார்டு கழிவுநீர் வெளியேறுவதால் பரபரப்பு-நோய் பரவலில் அலட்சியம் காட்டுவதாக புகார்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் இரட்டை இலக்கத்தில் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்த 7,274 பேரில் 6,668 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 138 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 87 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது 468 பேர் அரசு மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் 198க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இந்த வார்டின் கழிவறை கழிவுநீர் கொரோனா வார்டு, அம்மா உணவகம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழாய் வழியாக கடத்தப்படுகிறது. இக்குழாய்களில் திடீர் அடைப்பு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக கழிவுநீர் மருத்துவமனை சாலைகளில் வழிந்தோடுகிறது. இங்குள்ள கட்டிடங்களை சூழ்ந்து நிற்கும் இக்கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக உள்நோயாளிகள் உணவுகளை கூட சாப்பிட முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதை செப்பனிட மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கைவில்லை. துர்நாற்ற மிகுதியால் அம்மா உணவகத்தில் உணவு, திண்பண்டங்கள் வாங்குவதை பலரும் தவிர்த்துள்ளனர். இக்கழிவுநீர் புதிய கட்டிட பகுதியையும் சூழ்ந்துள்ளதால், இங்கு வேலைக்கு வர தொழிலாளர்கள் மறுத்துள்ளனர். மேலும் கொரோனா வார்டில் இருந்து வரும் கழிவுநீர் என்பதால் அச்சமும் நிலவுகிறது.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘கொரோனா பாதித்தவர்களின் பகுதியையே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா வார்டில் இருந்து கழிவுநீர் வெளியேறுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கடந்துதான் மருத்துவமனை அதிகாரிகள் சென்று வருகிறார்கள். ஆனால் இதுவரை இது யாரும் கண்ணில் படவில்லை போலும். எனவே நோய் தொற்றில் அலட்சியம் காட்டாமல் உடனே குழாய் அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் முறையாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும்’ என்றனர்.

கண்ட்ரோல் இல்லாத கொரோனா வார்டு

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை கொரொனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் வளாகத்தில் இரவு வேளையில் சுற்றி திரிகின்றனர். மருத்துவமனை எதிரே அமைந்துள்ள டீ கடை, ஓட்டல்களில் பகல் வேளையில உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டு  வார்டுக்கு திரும்புகின்றனர்.

மேலும் இங்கு நோயாளிகளை நலம் விசாரிக்க வரும் அவர்களது உறவினர்களிடம் எவ்வித கெடுபிடி இன்மையால் முகக்கவசம் அணியாமல் வந்து செல்கின்றனர். இந்த வார்டில் பணியாற்றும் டாக்டர்களில் ஒரு சிலரும் எவ்வித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்றி சென்று வருகின்றனர்.

கொரோனா பாதித்தோருக்கு சத்து மிகுந்த உணவுக்கு மாறாக இதர உள்நோயாளி பிரிவில் சிகிச்சை பெறுவோருக்கு வழங்கப்படும் உணவு வழங்கப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமைப்படுத்தினால் மட்டுமே நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இதற்கு மாவட்ட சுகாதாரத்துறை துரித நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என சமூகஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: